முதுமை தடுமாற்றத்தைத் தவிர்க்க... 
வீடு / குடும்பம்

முதுமையில் ஏற்படும் தடுமாற்றத்தைத் தவிர்க்க சில ஆலோசனைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

ம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தள்ளாமையில் அடிக்கடி கீழே விழுவார்கள். அதற்கான காரணம் கூட மிகச் சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அதை நாம் சரியான முறையில் கண்டுகொள்வதில்லை. அவர்களும் அதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் வயோதிகம் அவர்களை வாட்டி வதைக்கும்.

வயதான காலங்களில் தடுமாறி கீழே விழுவது என்பது அபாயகரமானது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். மெனோபாஸ் வயதை எட்டியவர்களும், எலும்பு வலுவிழத்தல் பிரச்னை உள்ளவர்களும் விழுதலைத் தவிர்ப்பது முக்கியம். இதைத் தவிர்க்க என்னென்ன செய்யலாம்?

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காது கேட்கும் கருவி, கண்ணாடி ஆகியவற்றை டாக்டரிடம் பரிசோதித்து சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கேட்கும் திறனும் பார்வையும் நன்றாக இருப்பது அவசியம்.

நீங்கள் சாப்பிடும் மருந்து, மாத்திரைகள் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுத்தும், இவற்றினால் கீழே விழ நேரிடுமா என்று டாக்டரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

சாப்பிட்டு விட்டோ, படுக்கையை விட்டோ சட்டென்று எழுந்திருக்காதீர்கள். இரத்த அழுத்த மாற்றங்களால் கண்கள் இருட்டிக் கொண்டு வாலாம். இதனால் தடுமாறி கீழே விழ நேரிடும். தட்ப வெப்ப நிலை மாற்றங்கள்கூட உடலின் சமநிலையைப் பாதிக்கக்கூடும். உங்களை வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் நன்றாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பழக்கமில்லாத இடங்களில் அல்லது மேடு பள்ளமான இடங்களில் நடக்கும்போது கைத்தடி அல்லது வாக்கர் பயன்படுத்தலாம். மழை அல்லது பனி பெய்யும் காலங்களில் நடக்கும்போது அதிக கவனம் தேவை.இறுக்கமான அடிப்பகுதி கொண்ட, குறைந்த உயரமுள்ள காலணிகளை அணியுங்கள். வழவழப்பான காலணிகள் வேண்டாம். தற்போது பெரும்பாலான கட்டடங்களில் பளபளப்பான டைல்ஸ் போடுகிறார்கள். இந்தத் தரை கலபமாக வழுக்கிவிடக் கூடியது.

கைகளில் பொருட்களை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறாதீர்கள். ஒரு கையில் பொருட்களை வைத்துக்கொண்டு, மறுகையால் கைப்பிடிகளைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

உயரமான இடங்களில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்கு மேஜை, ஸ்டுல் மீது ஏறாதீர்கள். அதேபோல, கீழே குனிந்து பொருட்களை எடுக்கும்போதும் கவனம் தேவை.

வீட்டில் நடமாடும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்கட்டும். மிதியடிகள், தரைவிரிப்புகள் தரையில் அழுத்தமாக, படிமானமாக இருக்கட்டும். இவற்றின் மேல் பகுதி சொரசொரப்பாக, கால்களுக்குப் பிடிமானம் தரக்கூடியதாக இருக்கட்டும்.

மாடிப்படிகளின் இரண்டு பக்கமும் கைப்பிடிகள் அழுத்தமாகப் பொருத்தப்பட வேண்டும். அவற்றைப் பிடித்தபடி படிகளில் ஏறவும்.கழுவி விடப்பட்ட தரைகளில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குளியலறையின் தரை வழுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தரையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பது மிக மிக முக்கியம்.

இரவு நேரங்களில் படுக்கையறையில் சிறிய ஜீரோ வாட் விளக்கு எரிய வேண்டும். ஸ்விட்சுகள் கைக்கெட்டும் தொலைவில் இருக்க வேண்டும். முதலில் விளக்கைப் போட்டுவிட்டு எழுந்திருங்கள். தொலைபேசியும் பக்கத்தில் இருக்கட்டும்.

சோபா, நாற்காலி, டைனிங் டேபிள் ஆகியவை நடப்பதற்கு இடையூறாக இல்லாமல் சுவரை ஒட்டி இருக்கட்டும். மின்சார வயர்களோ, கேபிள் டி.வி வயர்களோ நடக்கும் இடத்தில் குறுக்கே போகாமல் இருப்பது நல்லது.

வீட்டில் நீங்கள் உட்காருவதற்கு வசதியாக சோபாக்களும். நாற்காலிகளும் குறைந்த உயரத்தில் இருக்கட்டும். தினமும் முறையான உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியை விடாது செய்பவர்களுக்குத் தசைகளும் மூட்டுகளும் தசைநார்களும் வலிமையாக இருக்கும். எலும்பு வலுவிழத்தல் பிரச்னையும் கட்டுக்குள் இருக்கும்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT