தற்காலத்தில் மக்கள் பலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என விரும்புகின்றனர். ஆடம்பரமாக வாழ்வதால் ஏதாவது பயன் இருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் ஏதும் இல்லை என்ற விடைதான் கிடைக்கும். கடனும் அதிகரிக்கும். பாங்க் பேலன்சும் குறையத் தொடங்கும். எளிமையாக வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
ஆடம்பரமாக வாழ்ந்தால் நம்மைச் சுற்றி உள்ள உறவினர்கள், நண்பர்கள் நம்மைப் பற்றி பெருமையாக எண்ணுவார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. அவர்கள் அப்படி எண்ணுவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பலரது பிற்கால வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது என்பதே வரலாறு சொல்லும் உண்மை. எளிமையாக வாழ்பவருக்கு கவலைகள் குறைவு. அவருடைய வங்கிக் கணக்கில் எப்போதும் கணிசமாக பணம் இருக்கும். இந்த எண்ணமே நமது மனதை வலிமையாக்கும். எளிமையாக வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.
பணத்தை செலவழிக்கும் முன்னால் அந்த செலவு அவசியம்தானா என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பின்னர் செலவழியுங்கள்.
வெளியே செல்லும்போது கூடுமானவரை குறைந்த அளவு பணத்தையே கொண்டு செல்லுங்கள். அதிக பணம் செலவழிக்கக்கூடிய சூழல் வந்தால் ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சம்பளத்தைப் பெற்ற உடன் அதில் கணிசமாக ஒரு பகுதியை சேமிப்பதே உங்கள் முதல் வேலையாக இருக்க வேண்டும். சேமிப்பை நிரந்தரமான ஒரு செலவாக நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு சேமிக்கும் பணம் மெல்ல மெல்ல உயர்ந்து பிற்காலத்தில் ஒரு பெரும் தொகை உங்களுக்குக் கிடைக்க வழிவகுக்கும்.
கூடுமான வரையில் தனியாகச் செல்லும்போது பைக், கார் பயணங்களைத் தவிருங்கள். அருகிலுள்ள இடங்களுக்கு முடிந்தவரையில் நடந்தே செல்லுங்கள். சற்று தொலைவுள்ள இடத்திற்கு சைக்கிளில் செல்லுங்கள். அதிக தொலைவான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் ரயில் அல்லது பேருந்தில் பயணியுங்கள்.
உங்கள் அலுவலகம் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்தால் உங்கள் அலுவலகத்திற்கு தினமும் சைக்கிளில் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் பெட்ரோல் செலவு கணிசமாக மிச்சமாகும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
எந்த ஒரு பொருளை வாங்கும் முன்னரும் நான்கைந்து கடைகளில் அதன் விலையை விசாரித்துப் பாருங்கள். ஒரு பொருளை பல கடைகளில் பலவிதமான விலைகளில் விற்கிறார்கள். எங்கே விலை குறைவாகக் கிடைக்கிறதோ அங்கே வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.
அலுவலகத்திலிருந்து திரும்பும்போது மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்கு காய்கறிகளை வாங்கி பிரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் உபயோகிக்காவிடில் கெட்டுப்போகும் வாய்ப்பும் உள்ளது. மேலும், மின்சார செலவும் அதிகரிக்கும். அன்றாடம் வாங்கி அதை மறுநாள் நேரடியாக சமைத்துச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அன்றாடம் உடுத்தும் உடைகளை அதிக விலை கொடுத்து வாங்காதீர்கள். எப்போதும் எளிமையான ஆடைகளையே உடுத்தப் பழகுங்கள். சிலர் அடிக்கடி உடைகளை வாங்கிய வண்ணம் இருப்பார்கள். அவற்றை அணியவும் மாட்டார்கள். இப்படி அடிக்கடி வாங்குவதால் ஏராளமன உடைகள் சேர்ந்துவிடும். அதிக உடைகள் இருந்தால் அவற்றை அடிக்கடி அணிய முடியாது. அவை வீணாகத்தான்போகும் என்பதை நினைவில் வையுங்கள். அடிக்கடி உடைகளை வாங்கும் வழக்கத்தைக் கை விடுங்கள். வருடத்திற்கு சில குறிப்பிட்ட தினங்களைத் தேர்வு செய்து அதாவது திருமண நாள், பிறந்த நாள், பண்டிகை நாள் என குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உடைகளை வாங்குங்கள்.
சிலர் அடிக்கடி நகைகளை வாங்கும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த வழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். செய்கூலி சேதாரம் என்ற பெயரில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கணிசமான அளவில் இழக்கிறீர்கள் என்பதே உண்மை. தங்கம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் தங்க நாணயமாக வாங்கி சேமியுங்கள். பிள்ளைகளின் திருமண சமயங்களில் அவற்றைக் கொடுத்து நகைகளை வாங்கிக் கொள்ளலாம். தற்போது தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் கடைகளில் கிடைக்கின்றன. தற்போதைய சூழலில் விலை குறைவான இத்தகைய நகைகளை அணிவது பாதுகாப்பானது.
வீட்டில் தயாரிக்கும் உணவுகளை உங்களுக்குத் தேவையான அளவிற்கு சரியாக சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் உணவுப்பொருட்களும் எரிபொருளும் மிச்சமாகும்.
பலர் கோடை காலங்களில் ஏசியையும் மின்சார விசிறியையும் ஒருசேர இயக்கித் தூங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இது மிகவும் தவறான வழக்கம். இதனால் உடல்நலம் கெடும். மின்சார கட்டணமும் அதிகமாகும். கோடைக்காலங்களில் உங்கள் உடல் வியர்க்காத அளவிற்கு 26 அல்லது 27 அளவில் ஏசியை இயக்கித் தூங்குவது நல்லது. ஏசி இயங்கும்போது மின்விசிறியை இயக்கக்கூடாது.
ஓட்டலுக்குச் செல்லுவதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். மேலும் சிலர் ஓட்டலுக்குச் சென்று அதிக அளவில் ஆர்டர் செய்து அதை சாப்பிட முடியாமல் அப்படியே தட்டில் வீணாக்கிவிட்டுச் செல்வதை அடிக்கடி காண முடிகிறது. இதனால் உணவு வீணாவதுடன் அதற்காக நாம் செலுத்தும் தொகையும் அனாவசிய செலவுதானே. ஓட்டலுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து ஆர்டர் செய்யுங்கள்.
இப்படி எளிமையாக வாழ பல வழிகள் உள்ளன. எளிமையாக வாழ்ந்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களே அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எளிமையான வாழ்வு என்பது ஒரு தவத்தைப் போல. மனதும் அமைதியடையும். உங்களைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பேங்க் பேலன்சும் கணிசமாக உயரும்.