ஒவ்வொரு வேலையையும் நாம் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தினாலே எப்பொழுதுமே இன்முகத்துடன் காட்சி அளிக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இப்பதிவில் காண்போம்!
மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம். எந்த பிரச்னையானாலும் நிதானமாகப் பேசி கலந்தாலோசித்து முடிவெடுத்து விடலாம். வயதில் சிறியவர்கள் கூட சிறந்த யோசனையை சொல்லக்கூடும். ஆதலால் வீட்டினர் அனைவரும் மனம் ஒன்றுபட்டு ஓர் இடத்தில் அமர்ந்து எந்த முடிவை எடுத்தாலும் வீட்டில் நிம்மதி கிடைக்கும். இன்பம் தழைத்தோங்கும்.
நம்முடைய பெரும்பாலான தடுமாற்றத்திற்கு நாம்தான் காரணம். இதற்கு அலட்சியப்போக்கும், திட்டமிடாமையும்தான். எதிர்பாராத வகையில் டென்ஷன் வருவதுண்டு. சில தினங்களில் வீட்டினருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அதுபோன்ற நாட்களில் சரியான மருத்துவரை அணுகி நோய் தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கினால் சிறிது நேரத்தில் நம் டென்ஷன் பறந்து போகும். பிறகு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் எல்லோருக்கும் அழைப்பு விடுப்பது, வரும் விருந்தினரை சரியாக கவனிப்பது, அவர்களை வழி அனுப்பி வைப்பது போன்றவற்றில் சிறிது டென்ஷன் வரக்கூடும். அதைப் போக்கிக்கொள்ள நம்பகமானவர்களிடம், சிறப்பாக அந்தப் பணிகளை செய்பவர்களிடம், ஒவ்வொரு பணிக்கும் ஏற்ற ஆளை ஒதுக்கி அதில் அவர்களை ஈடுபடுத்தலாம். இதனால் உறவினர்களும் அகமகிழ்வர். நமது டென்ஷனும் குறையும், விழாவும் இனிதாக அமையும்.
மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக எதையாவது செய்து விட்டு பணமும் கரைந்து, உடல் நலமும் கெட்டுப்போய் நம்மை நாமே வருத்திக் கொண்டு துன்பப்படாமல் இருக்க, நாமே நன்றாகத் திட்டமிட்டு செயல்படலாமே. இதில் மற்றவர்களின் ஆலோசனைக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காமல், நம் பட்ஜெட்டுக்குள் எல்லாம் அடங்கும்படி பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தைகள் உள்ள வீடுகளில் பர்த்டே பார்ட்டி இப்பொழுதெல்லாம் அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்றபடி நாமும் செய்யவேண்டி இருக்கிறது. அதற்கான செலவு திட்டத்தையும் முறையாக திட்டமிட்டு வைத்தால் திண்டாட்டம் இல்லை. குழந்தைகளும் மகிழ்வர். நமக்கும் நிம்மதி.
பெரியோர்களும், குழந்தைகளும் உள்ள வீட்டில் ஜலதோஷம், இருமல், வயிற்றுப்போக்கு என்று ஏதாவது வரவே செய்யும். அதற்கு தகுந்தாற்போல், மருந்து மாத்திரைகள், எலக்ட்ரால் குளுக்கோஸ், விக்ஸ் போன்ற தைலங்களை எப்போதும் ஸ்டாக் வைத்துக் கொண்டால் நடுராத்திரியில் டென்ஷன் ஆகாமல் இருக்கலாம்.
வீட்டில் இட்லி மாவு, ரவை, கோதுமை மாவு போன்றவற்றையும், பருப்பு, காய்கறி வகைகளையும் எப்பொழுதும் இருக்கும்படி வைத்துக்கொண்டால், திடீர் விருந்தினர்களை சமாளிக்க ஏதுவாக இருக்கும். டென்ஷன் இன்றி அனைத்தையும் நன்றாக செய்யலாம்.
வீட்டு வேலை, அலுவலக வேலை என்று இரண்டையும் செய்யும் பெண்மணிகளுக்கு எது அவசரம் என்று லிஸ்ட் போட்டு செயல்படுத்தினால் டெலிபோன் பில், மின்சார பில், பால் கார்டு, லைப்ரரி புக், கேஸ் சிலிண்டர் போன்றவற்றை குறிப்பிட்ட தேதியில் கட்டவும் வாங்கவும் சிரமம் இன்றி செயல்படலாம். கவனக்குறைவாக இருந்தால் சில நாட்கள் ஃபெனால்ட்டி- டென்ஷன்தான்.
வீட்டிலே ஏதாவது வாகனம் இருந்தால் பெட்ரோல், காற்று நிரப்பி வைப்பது, அவ்வப்போது சர்வீஸ் கொடுத்து நல்ல நிலையில் வைத்திருந்தால் வண்டிகளும் டென்ஷன் இல்லாமல் ஓடும். நமக்கும் நோ டென்ஷன்.
குறிப்பாக, ஃபிளைட் டிக்கெட், ட்ரெயின் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றை மிக நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்து வைத்திருந்தால் அதை அவ்வப்பொழுது எடுத்து பார்த்துக்கொள்வது நல்லது. வெளியூர் பயணம் செல்பவர்கள் காலதாமதம் இன்றி முன்கூட்டியே சென்றால், டிராபிக் ஜாமில் திண்டாடி டென்ஷன் இல்லாமல் போகலாம்.
வீட்டை வெள்ளை அடித்து அல்லது ஒட்டடை அடித்து பொருட்களை எடுத்துவைக்கும் பொழுது, அவையவை இருந்த இடத்தில் வைத்தால் காலை சமையலின்போது டென்ஷன் இருக்காது. சாவியை தேடி அலைய வேண்டியிருக்காது. வீட்டில் யாரையும் அழைத்து இது எங்கே? அது எங்கே? என்று கேட்டு டென்ஷன் ஆக்காமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு பயணிக்கலாம்.
ஆக, வாழ்க்கையை இன்பமயமாக்கிக் கொள்வதற்கு இந்த வழிமுறைகளைக் கடைபிடித்தாலே போதும், குடும்பத்தில் சந்தோஷம் பெருக்கெடுக்கும்.