மனிதர்களைக் கையாள்வது ஓர் அற்புதமான கலை. ஒருவரை சரியான விதத்தில் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட சவாலான விஷயமாகவே இருக்கிறது. ஆனால், முயற்சி செய்தால் அதை சிறப்பாகவே செய்யலாம். அதற்கான வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
‘நீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற’ இந்த சொற்றொடர் கணவன் மனைவிக்குள்ளும், குடும்பத்தினர் இடையேயும் மற்றும் நண்பர்கள் உறவினர்களிடையே அடிக்கடி சொல்லப்படும் ஒரு வார்த்தை. சரியான புரிதல் இல்லாத காரணத்தினால்தான் குடும்பத்திலும், அலுவலகத்திலும் சக மனிதர்களிடத்திலும் சண்டை சச்சரவுகள், பிரச்னைகள், சிக்கல்கள் எழுகின்றன.
மனிதர்களை சரியாகப் புரிந்து கொண்டால் இவற்றை எளிதாக சமாளிக்கலாம். பொதுவாக, ‘நாம் எடுக்கும் முடிவுகள், வெளிப்படுத்தும் உணர்வுகள், நம் நடத்தை எல்லாமே நமது ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் ஆசைகள் மற்றும் நினைவுகளின் விளைவாக ஏற்படுகின்றன’ என்கிறார் சிக்மன்ட் பிராய்டு என்கிற உளவியலாளர்.
பிறரைப் பற்றிய விமர்சனம்: ஒரு மனிதருடன் பழகத் தொடங்கும்போதே அவரைப் பற்றிய பிம்பத்தை நமது மனது உருவாக்கத் தொடங்குகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளில் அது வலுப்பெற்று, ‘இவர் இப்படித்தான்’ என்று அவரைப் பற்றிய கண்ணோட்டம் வளர்கிறது. ஒவ்வொரு மனிதரும் பிறரைப் பார்க்கும் கோணம் வேறுபடுகிறது.
ஒருவரை விமர்சனம் செய்யும்போது, அவரைப் பற்றி மனதில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருக்கும் பிம்பத்தையும் அவர் மீதான நம் கோணத்தையும் வைத்துதான் பிறரை விமர்சனம் செய்கிறோம். அதுவே நமது வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும். எனவே, நாம் கருத்து கூறும் முன்போ, அவரது நடத்தையை விமர்சனம் செய்யும் முன்போ சற்றே யோசித்து பேச வேண்டும். நன்றாக நிதானித்து பிறர் மேல் கரிசனமும் அன்பும் கொண்டு அதன் பின்புதான் நாம் அவரை விமர்சிக்க வேண்டும்.
எம்பதி என்கிற அனுதாபம்: எம்பதி என்கிற அனுதாப குணம் ஒருவருக்கு அவசியம் இருக்க வேண்டும். பிறரின் நிலையில் தன்னை வைத்துப் பார்ப்பதே எம்பதி. சாந்தமான குணம் கொண்ட ஒருவர் ஏதோ ஒரு சூழலில் ஆத்திரப்பட்டு பேசினால், அவர் கோபக்காரராக மாறி விட்டார் என்று அர்த்தமில்லை. அவருடைய சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனுதாப குணமுள்ளவர்கள் மிக எளிதில் பிறரைப் புரிந்து கொள்கிறார்கள்.
நேர்மறை எண்ணங்களும், செயல்களும்: எப்போதுமே நேர்மறையான எண்ணங்களை சிந்திக்கப் பழக வேண்டும். அது வார்த்தைகளிலும் வெளிப்பட வேண்டும். பிறரிடம் பேசும்போது நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேர்மறை எண்ணங்களும், வார்த்தைகளும், செயல்களாக உருமாறி ஒருவரின் இயல்பாகவே மாறிவிடும். இதனால் அவருடைய நட்பு வட்டம் பெருகும். பிறருடன் பழகும்போது இந்த நேர்மறை குணம், பிறரின் உணர்வுகளை சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவும்.
இன்றைய நாளில் வாழ்தல்: ஒரு மனிதர் உங்களுக்கு கடந்தகாலத்தில் நிறைய உதவிகள் செய்து, தற்போது அப்படி செய்ய முடியாமல் போகலாம். ஆனால், கடந்த காலத்தில் அவர் செய்த உதவிகளையும், அன்பாக கருணையோடு நடந்து கொண்ட விதத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது அவர் இருக்கும் நிலையைப் பொருட்படுத்தாமல் அவர் மேல் அன்பு காட்டுவதுதான் சிறந்தது. ஒருவர் ஒரே ஒரு உதவி செய்திருந்தால் கூட அதை மறக்காமல் இருப்பதுதான் மனிதப் பண்பு.
நிறைகளை மட்டும் சுட்டுதல்: பிறரிடம் பேசும்போது அவர்களது குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை, திறமைகளை குறித்துப் பேசினால் அவர்கள் மகிழ்வார்கள். உங்களுடன் மேலும் பேசுவதை விரும்புவார்கள்.
பாராட்டும் பண்பு: பிறர் செய்யும் சிறு சிறு விஷயங்களைக் கூட மனதாரப் பாராட்டுவது அவசியம். இந்தப் பண்பு இருந்து விட்டால், உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருக்கும் என்பது உண்மை.