ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் சுயமரியாதை. சில சமயங்களில் சூழ்நிலை காரணமாக ஒருவருக்கு சுயமரியாதையின் அளவு குறையக்கூடும். உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இந்த ஆறு பழக்க வழக்கங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1. பிறர் உங்களை மதிக்கவில்லையா?: உங்களைச் சுற்றி உள்ள மனிதர்கள் உங்களுடைய கருத்துக்களையும் விருப்பங்களையும் மதிக்கிறார்களா என்று பாருங்கள். உங்களுடைய வீடு, அலுவலகம், நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை. அவற்றை முக்கியமாக அவர்கள் கருதுவதில்லை, புறம் தள்ளுகிறார்கள் என்றால் நீங்கள் அவர்களால் புறக்கணிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட நபர்களை நீங்கள் சகித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சுயமரியாதை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
2. உங்களைப் பற்றி இழிவாகப் பேசுதல்: குழந்தையாக இருக்கும்போது பெரியவர்கள் அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களை மிரட்டலாம், அடக்கலாம். ஆனால், வளர்ந்த பின்பும் அதேபோல நடத்தினால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய உணர்வுகளை மதிக்காமல் அவதூறாக உங்களை சுற்றி உள்ளவர்கள் பேசினால் அதையெல்லாம் நீங்கள் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒருவர் தாங்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு சுயமரியாதை இல்லை என்று அர்த்தம்.
3. தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்துகொண்டே இருப்பது: நீங்கள் ஒரு கருத்து சொல்ல வரும்போது அதை முழுமையாக சொல்லவிடாமல் இடையிலேயே நிறுத்தி தனது கருத்தை ஒருவர் சொல்வதும், உங்களை மேற்கொண்டு பேச விடாமல் தடுப்பதும் நடக்கலாம். நீங்கள் பேசுவதை உங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் கேட்க முடியாமல் போகலாம். உங்களுடைய கருத்தை முழுமையாக தெரிவிக்க முடியாமல் ஒருவர் உங்களை தொந்தரவு செய்தால் அதை சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
4. எல்லைகளை மீறுதல்: நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உறவினர்கள் எல்லாருக்குமான எல்லை ஒன்று உண்டு. அந்த எல்லையைத் தாண்டி அவர்கள் உங்களை நெருங்க அனுமதிக்க வேண்டாம். உங்களின் மிகவும் பர்சனலான விஷயங்களைப் பற்றி பேசுவதோ அல்லது நீங்கள் அதில் ஆர்வம் காட்டாதபோது அதை அறிய ஆவலுடன் முயற்சிப்பதையோ அனுமதிக்கக் கூடாது.
5. உங்களை மதிக்காமல் இருப்பது: ஒரு இடத்திற்கு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிஷத்தில் அந்த சந்திப்பை கேன்சல் செய்வது, அல்லது மிக மிகத் தாமதமாக வருவது, வீட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்பது, தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடுராத்திரியில் போன் செய்வது, இதெல்லாம் உங்கள் மேல் மரியாதை இல்லாததையும் உங்களை மட்டமாக நினைக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
6. உங்களைப்பற்றித் தவறாக கணித்தல்: நீங்கள் அவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வீர்கள் என்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார் என்று எண்ணாமல் எப்படி வேண்டுமானாலும் உங்களை பந்தாடலாம் என்ற அவர்களது நினைப்பே இதற்குக் காரணம். உதாரணமாக, உங்களுடைய நண்பருக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படும் தருணத்தில், நீங்கள் பணம் கொடுத்து உதவுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தகுந்த நேரத்தில் அதைத் திருப்பித் தர வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக பணம் தராமல் இருக்க ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களை மிகத் தவறாக உபயோகிக்கிறார்கள் என்று பொருள். இப்படிப்பட்ட ஆசாமிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.