கோடை காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகளுக்கு கோடை விடுமுறையும் வரப்போகிறது. வெயிலின் தாக்கம் இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் பெற்றோர்கள் இருப்பீர்கள். அத்தகைய பெற்றோர்களுக்குதான் இந்தப் பதிவு. சரி வாருங்கள் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் சில சிறந்த யோசனைகள் பற்றி பார்க்கலாம்.
முதலில் குழந்தைகளின் கோடை காலத்தை சிறப்பாக மாற்ற பெற்றோர்கள் தான் முயற்சிக்க வேண்டும். அந்த நேரத்தை அவர்களை வீணடிக்கச் செய்யாமல், பயனுள்ள பல விஷயங்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்ய வேண்டும். குறிப்பாக அவர்கள் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல், திறன்மிக்க விஷயங்களில் கவனம் செலுத்தச் செய்யுங்கள்.
படம் வரைதல்: படம் வரைதல் என்பது கோடைகாலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த பொழுதுபோக்காகும். இதன் மூலமாக அவர்களது கற்பனை ஆற்றலும், படைப்பாற்றலும் மேம்படுகிறது. எனவே உங்கள் குழந்தைகளை படம் வரைய ஊக்கப்படுத்துங்கள்.
தோட்டக்கலை: உங்கள் குழந்தைகளுக்கு தோட்டக்கலையில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. எனவே தோட்டக்கலை பற்றிய தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்தி, கோடைகாலத்தில் இதில் ஈடுபடச் சொன்னால், குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைய வழிவகுக்கும்.
புத்தகம் படித்தல்: புத்தகம் படிப்பது என்றால் பள்ளி புத்தகம் அல்ல, மற்ற துறைசார்பு புத்தகங்கள் படிப்பதாகும். அதாவது குழந்தைகளுக்கு ஏற்ற கதைகள், கட்டுரைகள், நாவல்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்யலாம். இது அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தி, சிறப்பான நபர்களாக மாற்ற உதவும்.
இசை: உங்கள் குழந்தைகள் இசை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள ஊக்குவியுங்கள். அவர்களுக்கு பிடித்த இசைக்கருவி பயிற்சி கொடுக்கலாம். அல்லது இசை பற்றிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இது அவர்களின் அறிவை மேம்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
சமைக்க கற்றுக்கொடுங்கள்: நான் ஏன் என் குழந்தைக்கு சமைக்க கற்றுத் தர வேண்டும், எனக் கேட்கிறீர்களா?. மற்ற கலைகளைப் போலவே சமையலும் ஒரு கலைதான். இதை குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. சிறுவயதில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கும்போது, பல தருணங்களில் அவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். அவர்களுக்கே சமைக்க தெரியும் போது வெளியே சென்று சாப்பிடும் பழக்கம் குறைந்து, பணத்தை மிச்சப்படுத்துபவர்களாக அவர்கள் மாறுவார்கள்.