குளிர்காலத்தில் சூரியனின் வெப்பம் குறைவாக இருக்கும்போது பல உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் பத்து விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நெய்: நெய்யை உருக்கி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அது கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது மற்றும் உடல் குளிரைத் தாங்க உதவுகிறது.
2. வெல்லம்: குளிர்காலத்தில் செரிமானப் பிரச்னைகள் தலைதூக்கும். வெல்லம், செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. காபி, டீயில் சர்கரைக்குப் பதில் வெல்லம் சேர்க்கலாம்.
3. உலர் பழங்கள்: உலர் பழங்கள் குளிர்காலத்தில் சாப்பிட உகந்த உணவாகும். ஆப்ரிகாட், உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை உடலுக்கு இயற்கையான சூட்டைத் தரும்.
4. மஞ்சள்: மஞ்சள் இரத்தத்தைச் சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீர் செய்து, சருமத்துக்கு சத்துக்களை அளிக்கிறது. பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. இதை சாம்பார், கூட்டு, ரசம், குழம்பு என அனைத்து உணவுகளிலும் சேர்க்கலாம்.
5. துளசி: இருதயம் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. ஆஸ்துமா, இருமல், சளி மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.
6. இஞ்சி: ஜீரணத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை இது குணமாக்கும். பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது. இஞ்சி டீ வாயுத் தொந்தரவை குறைக்கிறது
7. இலவங்கப் பட்டை: இலவங்கப் பட்டை கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகளை குணமாக்குகிறது. சுடு நீரில் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியையும் ஒரு மேசைக் கரண்டி தேனையும் சேர்த்து குடித்தால் சளி பிரச்னை குணமாகிறது.
8. கடுகு: இருமலைக் கட்டுப்படுத்தி விஷத்தை முறிக்கவல்லது கடுகு. இது ஜீரண கோளாறுகளை சரி செய்வதோடு, ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. விக்கலையும் இது கட்டுப்படுத்தும். இரத்த சுத்திகரிப்புக்கு கடுகு பெரும் உதவி புரிகிறது.
9. ஏலக்காய்: குளிர்காலத்தில் ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்யலாம்.
10. சூடான சூப்கள்: காய்கறிகளுடன் வெள்ளைப்பூண்டு, மிளகுத்தூள், தக்காளி, சேர்த்து சூடான சூப் வகைகள் செய்து குடிப்பது குளிரையும் தாங்க செய்வதோடு, உடலுக்கு வலு சேர்க்கிறது.