உறவினரோ, நண்பர்களோ நம் வீட்டுக்கு வரும்போது விருந்து சாப்பாடு போட்டு அவர்களை உபசரிப்பது சரிதான். அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர் குறிப்பிட்ட சில உணவு வகைகளைச் சொல்லி அவர்களிடம், ‘அது நல்லா இருக்கா? இது நல்லா இருக்கா?’ என்று என்று கேட்டு அவர்களை தர்ம சங்கடப்படுத்த வேண்டாம். எப்படி இருந்தாலும் அவர்கள் ‘நன்றாக இருக்கிறது’ என்றுதான் சொல்லி ஆக வேண்டும். நம் வீட்டு உணவு நன்றாக இருந்தால் அவர்கள் தானாகவே பாராட்டுவார்கள். அதனால் விருந்து வைத்துவிட்டு இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்கலாம்.
பொதுவெளிகளில் உறவினர்கள், நண்பர்கள் ஒன்றாகக் கூடிப் பேசும்போது ஒருவரின் வயதை கேட்பது நாகரிகம் இல்லை என்று சொல்வார்கள். வயதானவர்கள் தங்களது வயதைச் சொல்ல தயங்குவார்கள். பலர் முன்னிலையில் ஒருவரின் வயதைக் கேட்டு அவர்களை தர்ம சங்கடப்படுத்தாமல் இருக்கலாமே.
உற்றார் உறவினர்கள் பலரும் ஒன்றாகக் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருவரது சம்பளம் மற்றும் வருவாயைக் கேட்பதும் அவர்களை தர்மசங்கடப்படுத்தும். நீங்கள் கேட்கும் நபரின் சம்பளம் அல்லது வருவாய் மிகவும் குறைவாக இருந்தால் பலர் மத்தியில் அவர்கள் சொல்லக் கூச்சப்படுவார்கள் அல்லவா? மேலும், அதை அவர்கள் விருப்பவும் மாட்டார்கள். அதனால் பலர் மத்தியில் இப்படிக் கேட்பதைத் தவிர்க்கலாமே.
புது வீடு கட்டுபவர்களிடமோ, நிலம், மனை வாங்குவோரிடமோ, ‘எவ்வளவு செலவாயிற்று? கடன் எவ்வளவு வாங்கினீர்கள்?’ என்று கேட்பதும் தவிர்க்க வேண்டிய ஒன்றுதான். மேலும், ஒருவர் கட்டிய வீட்டைப் பற்றி குறை சொல்வதோ, விமர்சனம் செய்வதோ கூடவே கூடாது.
பொதுத் தேர்வு எழுதியவர்களிடமும் அவர்களது பெற்றோரிடமோ தேர்வு முடிவுகள் வந்த பிறகு, ‘எவ்வளவு மார்க், அடுத்து என்ன கோர்ஸில் சேரப் போகிறாய்?’ என்றெல்லாம் கேட்டால் குறைவான மார்க் வாங்கி இருப்பவர்கள் பதில் சொல்ல தயங்கலாம் அல்லது அந்தக் கேள்வி அவர்களை தர்மசங்கடப்படுத்தலாம்.
பலர் கூடிப் பேசிக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட ஒருவரின் குறைகளைப் பற்றி நகைச்சுவையாகக் கூட மற்றவரிடம் சொல்லக் கடாது. அதைக்கேட்டு மற்றவர் சிரிக்கும்போது சம்பந்தப்பட்டவர் மனம் புண்படலாம். அதனால் பொதுவெளியில் பேச்சில் நாகரிகம் கடைபிடிப்பது எல்லோருக்கும் நல்லது.