வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்புத் தன்மைதான் மருத்துவ பயன் நிறைந்தது. ஆதலால், அதனை நிறைய தண்ணீர் விட்டுப் பிழியாமல், குறைந்த அளவு தண்ணீரிலேயே கழுவி சுத்தம் செய்து சமைத்து சாப்பிடும்போதுதான் அதன் முழு பயனையும் அடைய முடியும். வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து, பொடியாக அரிந்து எண்ணெயில், கடுகு, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் தாளித்து பொரியல் செய்து சாப்பிட்டால் ரத்த மூலம் குணமாகும். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். இதனால் உடல் சூடு தணியும். குடல் புண் ஆறும்.
உடல் சூடு அதிகமாகிவிட்டால், வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து, தேங்காய்ப் பால், நெய் சிறிது சேர்த்து, கூட்டு செய்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். வாழைப்பூவின் நடுப்பகுதியை நறுக்கி, அதனுடன் உப்பு சேர்த்து அவித்து அந்தச் சாறைக் குடித்துவந்தால் வயிற்று வலி உடனே சரியாகும்.
வாழைப்பூவுடன் மிளகு, சீரகம் மற்றும் இதர மளிகைப்பொருட்கள் கலந்து ரசம் வைத்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு வெள்ளைப்படுவது கட்டுப்படும். மாதவிலக்கின்போது சில பெண்களுக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். அப்பொழுது வாழைப்பூவில் இருக்கும் வெண்மையான பாகத்தை பாதி அளவு எடுத்து நறுக்கி சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, கூடவே பனங்கற்கட்டும் கலந்து குடித்து வந்தால் ரத்தப்போக்கு சட்டென்று நிற்கும். அதனுடன் உடல் அசதி, வயிற்று வலி, சூதகவலி அனைத்தும் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குழந்தைப் பேறு தாமதமாகும் தம்பதியர் வாழைப்பூவை பறித்த இரண்டு நாட்களுக்குள், பூவின் முழு பாகத்தையும் வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் விருப்பப்படி சமைத்து சாப்பிட்டு வர, விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.
சாதாரணமாக வீட்டில் சமைப்பவர்கள், துவர்ப்பான வாழைப்பூவுடன் முருங்கைக்கீரை, தேங்காய்ப் பூ சேர்த்து துவட்டல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். இரும்புச் சத்து முருங்கைக் கீரையில் இருந்து கிடைக்கும். துவர்ப்புச் சுவை குறைந்து இருப்பதால் குழந்தைகள் அதை ஒதுக்காமல் உண்பார்கள். ஆரோக்கியமாய் வாழ, வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க; வாழைப்பூ சாப்பிடுவோம்!