வீடு / குடும்பம்

இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவிய ஆசிரியை!

எஸ்.விஜயலட்சுமி

ன்று நாடெங்கும் ஆண்களும் பெண்களும் கல்வி பயில பள்ளிகளும் கல்லூரிகளும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது என்கிற செய்தி இப்போது வியப்பாக இருக்கும். ஆனால், திருமணம், குழந்தைப் பேறு, இல்லற பராமரிப்பு போன்ற குடும்பம் சார்ந்த கடமைகளை மட்டுமே பெண்கள் ஏற்று செய்ய வேண்டும் என்கிற கருத்து நிலவி வந்த காலத்தில் பெண் கல்விக்கான விடிவெள்ளியாக தோன்றியவர்தான் சாவித்திரிபாய் ஃபூலே.

சாவித்திரி பாய் ஃபூலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆவார். இவர் இந்தியாவில் புனேவில் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவிய ஆசிரியை என்ற பெருமைக்குரியவர். கல்விப் பணிக்காகவும் சமுதாய மேம்பாட்டிற்காகவும் பெண்களின் வாழ்வு சிறப்புறவும் இவர் செய்த சேவைகள் ஏராளம். இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

பெண்கள் கல்வி: 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் பெண்களுக்கு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலை நிலவியது. ஆணாதிக்க சமுதாய விதிமுறைகள் வேரூன்றி இருந்த அந்தக் காலகட்டத்தில் கல்வி என்பது பெண்களுக்கு தேவையற்றதாகவோ அல்லது தீங்கு விளைவிப்பதாகவோ கருதப்பட்டது.

பெண்களுக்கு கல்வி அவசியம் என்ற கோட்பாட்டை ஆழமாக வலியுறுத்தினார் சாவித்திரி பாய் ஃபூலே. 1848ம் ஆண்டில் தனது கணவர் ஜோதிராவ் ஃபூலே உடன் இணைந்து இந்தியாவில் புனேவில் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவினார். அது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகக் கருதப்பட்டது.

பெண்களின் உரிமைகள்: சாவித்திரி பாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆனார்.  சமூகத்தில் அதிகாரம் அளிப்பதற்கான திறவுகோல் கல்வி என்பதை அவர் ஆணித்தரமாக பெண்களிடம் எடுத்துரைத்தார். இதனால் அவர் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளானார். கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர் மீது  வசைச் சொற்கள், சாணத்தை எறிவது மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டார். ஆனாலும், விடாப்பிடியாக பெண்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

முற்போக்கு செயல்கள்: அவரும் அவரது கணவரும் தலித் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்காக பள்ளிகளை திறந்தனர். தலித்துகளின் கல்வி தடை செய்யப்பட்ட அக்காலகட்டத்தில் சாவித்திரிபாய் எடுத்தது முற்போக்கான மற்றும் துணிகரமான நடவடிக்கையாகும்.

கைம்பெண்கள் மறுவாழ்வு: சாவித்திரி பாய் கைம்பெண்கள் மறுவாழ்வுக்காகவும் பாடுபட்டார். அன்றைய காலகட்டத்தில் கைம்பெண்கள் பெரும்பாலும் ஆதரவற்றவர்களாக அல்லது இழிவான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டவர்களாக இருந்தார்கள். எனவே, அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை கண்ணியமான இடத்தில் குடியிருக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 1854ம் ஆண்டில் கர்ப்பிணி. விதவைகளுக்கு தங்குவதற்கும் குடியிருப்பு இல்லங்களை திறந்தார்.

1873ம் ஆண்டு சத்திய சோதக் சமாஜ் என்று அமைப்பை நிறுவினார். ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பெண்கள் மேம்பாட்டிற்காக இந்த இயக்கம் அர்ப்பணிப்பு உணர்வுடன் சாவித்திரி பாயின் தலைமையில் செயல்பட்டது.

சாவித்திரி பாயின் இலக்கிய பங்களிப்புகள்: ஆசிரியராக சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல். சாவித்திரி பாய் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். தனது படைப்புகள் மூலம் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். அவரது முக்கியமான படைப்புகளில் காவியா ஃபூலே என்கிற கவிதை தொகுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சமத்துவம் மற்றும் மனித கண்ணியத்திற்கான வாதங்களை உள்ளடக்கியது.

அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனியாக ஒரு கிளினிக் ஆரம்பித்து பெண்களின் ஆரோக்கியத்திற்காகவும் பாடுபட்டார். துரதிஷ்டவசமாக பிளேக் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பராமரிக்கும்போது இவரும் பாதிக்கப்பட்டு 1897ல் இறந்தார்.

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

SCROLL FOR NEXT