அழும் குழந்தை https://www.bellybelly.com
வீடு / குடும்பம்

கைக்குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!

இந்திராணி தங்கவேல்

குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் எப்பொழுதும் அழுதுகொண்டே இருப்பார்கள். நன்றாக சாப்பிட மாட்டார்கள், உறங்க மாட்டார்கள், நம்மையும் உறங்க விட மாட்டார்கள். நமக்கும் என்ன செய்து அழுகையை நிறுத்துவது என்ற குழப்பம் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் சில எளிமையான மருத்துவக் குறிப்புகளை கையாண்டால் ஆபத்துக்கு உதவும். அவற்றுள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

* கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஐந்தாவது மாதம் மருந்து கொடுப்பது வழக்கம். அதற்கு வெற்றிலை, வில்வ இலை, வேப்பம் கொழுந்து, அருகம் புல், துளசி இலை இவை ஐந்தையும் நன்றாக மைய அரைத்து ஒரு பாலாடை கொடுத்தால் போதும்.

* சின்னக் குழந்தையின் எல்லா துணிகளையும் வெந்நீரில் அலச அலர்ஜி இருக்காது. சுத்தமாகவும் இருக்கும். அதேபோல் சிறு குழந்தைகளை நல்ல காட்டன் வெள்ளைத் துணியில் படுக்க வைத்தால் எறும்பு, பூச்சி போன்ற எது இருந்தாலும் நன்றாகத் தெரியும்.

* குழந்தைகளுக்கு தலைக்குக் குளிக்க வைக்கும்பொழுது வேப்பங்கொழுந்து, சீரகம், மிளகு, பூண்டு பல் இவற்றை அரைத்து வெந்நீர் தேவையான அளவு ஊற்றி வடிகட்டி கொடுக்க ஜலதோஷம் பிடிக்காது. ஜீரண சக்தியும் நன்றாக இருக்கும். உடல் நலமும் நன்றாகத் தேறும்.

*  பல் முளைத்த குழந்தைகள் தூங்கும்போது அடிக்கடி பற்களைக் கடித்துக் கொண்டால் அவர்கள் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

* குழந்தைகளுக்கு உணவில் அடிக்கடி சௌவ் சௌவ் காயை சேர்த்து சமைத்துக் கொடுத்தால் இருதயம் நல்ல பலம் பெறும். உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்.

* நான்கு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் விரல் சூப்பினால் அதைக் கட்டுப்படுத்த வேப்ப இலையை அரைத்து விரலில் தேய்த்து ஒட்டும்படி பூசி அதன் மேல் பேண்டேஜ் சுற்றிவிட ஐந்தாறு நாளில் மறந்து விடுவார்கள். அதேபோல், குழந்தைகள் விரல் சூப்புவதை நிறுத்த கலர் துணிகளை ஒன்று சேர்த்து சூப்பும் விரலில் சுற்றி விட, கலர் துணியைப் பார்த்து விரல் சூப்புவதை மறந்து விடுவார்கள்.

* குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடித்துள்ளபோது முகத்தில் பவுடர் பூசினால் அதன் துகள்கள் ஜலதோஷத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஆதலால் அதுபோன்ற சமயங்களில் பவுடர் பூசுவதை குறைப்பது நல்லது.

* குழந்தைகளுக்கு வாய்ப்புண் உள்ளபோது பாலில் மாசிக்காயை உரசி அத்துடன் சிறிது தேனை கலந்து நாக்கில் தடவ குணம் பெறும்.

* குழந்தைகளுக்கு திடீரென்று வயிற்று உப்புசம் ஏற்பட்டால் முருங்கை இலை சாறு பிழிந்து அத்துடன் உப்பு மற்றும் சுட்ட வசம்புத் தூள் சேர்த்துக் குழைத்து வயிற்றின் மேல் தொப்புளைச் சுற்றி கனமாக பூசினால் உப்புசம் குணமாகும்.

* சில குழந்தைகள் விடாமல் அழும். அப்பொழுது இரண்டு ஸ்பூன் வெண்ணீரில் இரண்டு துளி தேன் கலந்து கொடுத்தால் அழுவதை நிறுத்தி விடும்.

* சின்னக் குழந்தைகளுக்கு சளி தொல்லையாக இருக்கும்பொழுது துளசிச் சாற்றை தாய்ப்பாலில் கலந்து கொடுக்க சளி குறைந்து விடும். துளசிச் சாறு நான்கு சொட்டு போதுமானது. 9 அல்லது 10 மாதக் குழந்தையாக இருந்தால் முக்கால் ஸ்பூன் கலந்து தரலாம். தேனிலும் கலந்து கொடுக்கலாம்.

* குழந்தைகளுக்கு சிரங்கு ஆற காசுக்கட்டியை சுடு தண்ணீரில் போட்டு கரைத்து, அதைக் குழம்புப் பதத்தில் எடுத்து ஆறவைத்து சிரங்கின் மீது தடவி 2 மணி நேரம் ஊற வைத்து குளிக்க வைக்க நல்ல குணம் தெரியும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT