நம் அன்றாட வாழ்வில் சில விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும், அதை கடைபிடிக்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆயுள் காப்பீடு, வங்கிக் கணக்கு, தபால் அலுவலக முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் என நம் அனைத்து ஆவணங்களுக்கும் வாரிசு நியமனம் செய்து இருக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாரிசின் பெயர் ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு ஆகிய மூன்றிலுமே சரியாக இருக்க வேண்டும். முகவரி மாற்றம் இருந்தால் உடனே மாற்ற வேண்டும். முகவரி அத்தாட்சி என்பது தற்போது வசிக்கும் வீட்டிற்குள்தான். முன்னால் இருந்த வீட்டிற்கல்ல.
புதிய வீட்டிற்கு குடியேறி இருந்தீர்கள் என்றால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி புதிய வீட்டிற்கான முகவரி அத்தாட்சியை பெறலாம். அதைக் கொண்டு அனைத்து ஆவணங்களிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.
திருமணமான பெண்கள் தங்கள் கணவர் பெயரை சேர்த்துக்கொள்வர். அப்படி சேர்த்தால் உடனடியாக பான் அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் அந்த மாற்றத்தை குறிப்பிட்டு புதிது வைத்துக்கொள்ள வேண்டும். பெயர் மாற்றம் இருந்தால் அரசிதழில் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு 415 ரூபாய் மட்டுமே செலவாகும்.
E or s கணக்காக வைத்துக்கொள்ள பலவிதங்களில் நன்மை பயக்கும். LIC பாலிசி வைத்திருப்பவர்கள் முகவரி மாற்றம், வங்கிக் கணக்கு எண் மாற்றத்தை குறிப்பிட்டு புதிது வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், முதிர்வு தொகை, முதிர்வு தேதியில் வங்கிக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்.
உபயோகித்துக் கொண்டிருக்கும் கைப்பேசி தொலைந்து விட்டால், புது சிம் வாங்கும்போது பழைய நம்பர், அதே நிறுவன நெட்வொர்க் ஐ கேட்டு வாங்கவும். புதிதாக மாற்றினால் அனைத்து ஆவணங்களிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
மின் கட்டண இணைப்பில், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவரின் நம்பர், பெயர்தான் இடம் பெற வேண்டும். குடும்ப தலைவர் இறப்பிற்குப் பின்னர் எக்காரணம் கொண்டும் அவர் பெயரில் வங்கிக் கணக்கோ, இணைப்போ இருக்கக் கூடாது.
வாகனங்களை உரிமையாளர் பெயரிலேயே பதிவு செய்துகொள்ள வேண்டும். விற்கும்போதும் முறையாக மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் விபத்து காப்பீடு முதற்கொண்டு பல பயன்களையும் பெற முடியும். இதேபோல், ஒவ்வொரு ஆவணங்களையும் சரிபார்த்தல் அவசியம். பின்னாளில் எந்தவித சிக்கலும் இன்றி தொடர, இதுபோன்ற முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.