குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் கண்டுபிடித்து விடுவார்கள். அதேபோல், நெருக்கமான நண்பர்கள் பொய் சொன்னாலும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். சில நேரங்களில் பொய் கூறுவதற்கு ஒரு அறிகுறிகூட இல்லாமல் சிலர் பொய் சொல்வார்கள். ஆனால். அவர்களுக்கே தெரியாமல் ஏதாவது ஒரு வகையில் மாட்டிக் கொள்வார்கள். இனி, பொய் கூறுபவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பார்ப்போம்.
பேசுவதை கவனியுங்கள்: ஒருவர் பேசும்போது உண்மை பேசுகிறாரா? பொய் பேசுகிறாரா? என்பதை அவர்கள் பேசும் தோரணையிலிருந்தே கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு பொய் பேசும்போது வராத இருமலை, அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்காக அடிக்கடி செயற்கையாக வரவைத்துக் கொண்டு பேசுவார்கள்.
திடீரென்று சம்பந்தமே இல்லாத விஷயத்தையோ அல்லது ஒரு சாதாரண விஷயத்தையோ தன்னையறியாமல் சத்தம் போட்டு சொல்வர்கள். மிக வேக வேகமாக உரையாடலை முடிக்கப் பார்ப்பார்கள். ஏனெனில், பொய் சொல்பவர்கள் எப்போது அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்கலாம் என்றே வழி தேடிக்கொண்டிருப்பார்கள்.
முக பாவங்களைக் கவனியுங்கள்: ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆம்! ஒருவர் பேசும்போது அவர் முக பாவங்களும் சேர்ந்து பேசுமாம். வார்த்தைகளை விட முக பாவம் உண்மையை மட்டுமே பேசும் தன்மையுடையது. ஒருவர் பேசும்போது இயல்பை விட அதிகமாகத் தலையை ஆட்டி ஆட்டி பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் எதையோ மறைக்கிறார் என்று உறுதி செய்து விடலாம்.
பொதுவாக, பொய் சொல்லும்போது மூளை பேச்சிற்கு மட்டுமே ஒத்துழைக்குமே தவிர, முக பாவத்திற்குச் சிறிதும் ஒத்துப்போகாது. அதனால் முக பாவத்தை உண்மை பேசுவது போல் வைத்துக்கொள்ளத் தூண்டும். ஆனால், அதுவே அப்பட்டமாகக் காண்பித்துக் கொடுத்து விடும் இவர் நடிக்க முயற்சிக்கிறார் என்று. எப்போதும் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை பார்த்துதான் பேச வேண்டும்.
ஒருவர் உங்கள் கண்களைப் பார்க்க முயன்றும், பேசும்போது சரியாகப் பார்க்க முடியவில்லை என்றால் அவர் ஏதோ உண்மையை மறைக்கிறார் என்று கண்டுப்பிடித்து விடலாம்.
உடல் தோரணையைக் கவனியுங்கள்: ஒருவர் வழக்கத்திற்கு மாறாகப் பேசும்போது பேச்சுக்கு இடையிடையே கழுத்தைப் பின்பக்கம் பிடிப்பது, கைகளை இடையிடையே தேய்ப்பது, வாயை மூடிக்கொள்வது, மூக்கின் மேல் விரல் வைப்பது போன்ற தேவையற்ற ஜாடைகள் செய்வார்கள். அப்போது எளிதாக நீங்கள் கண்டுப்பிடித்து விடலாம் அவர்கள் ஏதோ பொய் சொல்கிறார்கள் என்று. உங்களிடம் யாராவது பொய் சொல்கிறார் என்றால் இந்த மூன்று முறைகள் வைத்து நீங்கள் எளிதாக அவர்களைக் கண்டுபிடித்து விடலாம்.
அப்படி ஒருவர் பொய் சொல்கிறார் என்றால் நீங்களாகவே அவர் பேசுவதற்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள். உதாரணத்திற்கு, ‘பரவாயில்லை எதையும் மறைக்க வேண்டாம்’ என்று.