துன்பங்கள் மத்தியிலும் நீங்கள் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் எல்லா தடைகளையும் வெல்வதற்கு எளிய வழியாகும்.
ஒரு முறை திருமணமாகி வந்த பெண் மற்றும் மாப்பிள்ளையிடம் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு உணவு உண்ட வேளையில் டைனிங் டேபிள் அதிரும்படி ஒருவர் ஜோக் சொல்ல, புதுப்பெண் குலுங்கி குலுங்கி சிரித்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண், "நீங்க சிரிக்கிறத போய் கண்ணாடியில் பாருங்க. உங்க முகம் எவ்வளவு அழகா இருக்குன்னு? உங்க அழகுக்கு சிரிப்பு ஒரு கேடா" என்று கேட்டார். எங்களுக்கெல்லாம் என்னவோ போல ஆகிவிட்டது. எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டோம். அங்கு கனத்த மௌனம் நிலவியது.
அந்த நேரத்தில் அந்த புதுப்பெண் எந்த வருத்தத்தையும் காண்பிக்காமல், ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வைச்சார் வள்ளுவரும் சரிங்க! துன்பம் நேர்கையில் யாழிசைத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? போன்ற பாடல்களை பாடியபடியே எதிர்வினையாற்றினார். அந்த சகிப்புத்தன்மையைப் பார்த்த நாங்கள் அசந்து போனோம். கருப்பாக ஒரு பெண் இருந்தால் அவள் சிரிக்கக் கூடாதா? சிரிப்பது அப்படிப்பட்ட ஒரு குற்றமா? என்று எங்களுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். ஆனால், வெளியில் எதையும் பேச முடியாது என்பதனால் அமைதியாக வீடு திரும்பினோம். கூடவே அந்த புது பெண்ணின் சகிப்புத்தன்மை, பி பாசிட்டிவ் தன்மையைக் கற்றுக்கொண்டே. என்றாலும் அந்தப் பெண், அதன் பிறகு தாழ்வு மனப்பான்மையில் முடங்கிக் கிடந்தாள். அவளை இயல்பு நிலைக்கு அழைத்து வர மிகவும் பாடுபட்டோம். அதை சந்தித்து விட்டு இந்தக் கதையைப் படிக்க நேர்ந்தது.
அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் இதோ அந்தக் கதை:
ஒரு காட்டில் நிறைய மரங்கள் இருந்தன. அவற்றில் ஒரே ஒரு மரத்தை தவிர மற்ற மரங்கள் நேராகவும், உயரமாகவும் வளர்ந்து இருந்தன. அந்த ஒரு மரம் மட்டும் வளைந்து வளைந்து வளர்ந்து குட்டையாக காட்சியளித்தது. இதனால் மற்ற மரங்களைப் பார்த்து பொறாமைப்பட்டதுடன், அதற்கு தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டது. எல்லா மரங்களும் நேராக உயரமாக வளர்ந்து உள்ளது. பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக உள்ளன. நான் மட்டும்தான் வளைந்து வளைந்து வளர்ந்து குட்டையாக அவலட்சணமாக உள்ளேன் என்று நினைத்து துன்பமடைந்தது.
மரம் வெட்டுபவர் பலர் அந்த காட்டிற்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த மரங்களை எல்லாம் கோடறியால் வெட்டி வீழ்த்தினார்கள். நேராக நெடிது வளர்ந்திருந்த எல்லா மரங்களும் சாய்ந்தன. ஆனால், வளைந்து இருந்த அந்த மரத்தின் அருகே சிலர் வந்தனர். ‘இந்த மரம் நமக்குப் பயன்படாது. நேரான பலகை எதுவும் கிடைக்காது. இதை வெட்ட வேண்டாம்’ என்றான் அவர்களில் ஒருவன்.
எல்லோரும் அங்கிருந்து சென்றார்கள். தன் அவலட்சணமே தன்னைக் காப்பாற்றியது என்று மகிழ்ந்தது அந்த மரம். ஆனாலும் அப்பொழுதும் அந்த மரத்திற்கு சிறு நெருடல் ஏற்பட்டது. இப்பொழுதும் நாம் யாருக்கும் பயன்படாமல்தானே இருக்கிறோம் என்று தாழ்வு மனப்பான்மை கொண்டது.
அந்த நேரத்தில், ‘அப்பாடா! ஸ்ஸ்... இந்த மரமாவது இருக்கே நிழல் தர’ என்று, அதன் அடியில் களைத்து வந்தவர்கள் அமர்ந்தார்கள். அப்பொழுதுதான் மரம் உணர்ந்தது. நாமும் எதற்கோ ஒன்றுக்கு பயன்படுகிறோம். ஆதலால் எதிலும் நன்மை உண்டு என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு, தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்து நிம்மதியாக இருந்தது.
கோபத்திலும் மகிழ்ச்சியிலும் நேர்மையான வார்த்தையை சொல்லுங்கள். உலகத்தில் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ வேண்டும். அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, பிறர் நலம் முதலிய மனித பண்புகளைக் கொண்ட மனிதர்களாய் வாழுங்கள்.
எய்த அம்பு, கொய்த மலர், பெய்த மழை, சொன்ன சொல், வீணடித்த காலம் இவை எல்லாம் மீண்டும் பிறந்த இடத்திற்கு திரும்பாது.