வீடு / குடும்பம்

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க ஒரு டசன் யோசனைகள்!

தி.ரா.ரவி

சிக்கனம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும். எதிர்கால வளமான வாழ்வுக்கும் வளத்துக்கும் சேமிப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. சிக்கனமாக இருப்பது சேமிப்பதற்கான முதல் படியாக கருதப்படுகிறது. அந்த சிக்கனத்தை கடைபிடிப்பதற்கான அவசியமான பன்னிரு யோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அதை உடனே வாங்காதீர்கள். சற்றே தள்ளிப் போடுங்கள். அடுத்த நாள் அந்தப் பொருளை வாங்குவது அவசியம்தானா என பலமுறை யோசியுங்கள். அது இல்லாமலும் சமாளிக்க முடியும் என்றால் அந்தப் பொருளை வாங்கவே வேண்டாமே.

2. ஒவ்வொரு மாதமும் செலவுகளுக்கு என்று ஒரு பட்ஜெட் போடுங்கள் மளிகை, காய்கறி, பால், சினிமா, பொழுதுபோக்கு, பெட்ரோல், வாடகை, மருத்துவ செலவு, திருமண விசேஷம் என எல்லாவற்றுக்கும் ஒரு பட்ஜெட் போட்டுங்கள்.

3. தற்போது மொபைலில் ஆன்லைனில் பணம் செலுத்துவது நடைமுறையில் இருக்கிறது. அதனால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று நமக்குத் தெரிவதில்லை. மாதக் கடைசியில்தான் எக்கச்சக்கமா செலவு செய்திருப்பது தெரிகிறது. நாம் ஆன்லைனில் பணம் கட்டி இருந்தாலும், ஒரு நோட்டில் இரவு தூங்கும் முன் அன்றைய செலவுகளை தினமும் எழுத வேண்டும். வாரம் ஒரு முறை அந்தக் கணக்கு நோட்டை எடுத்து பார்த்தால், எதற்கு நாம் அதிகமாக செலவு செய்கிறோம் என்று தெரிந்து கொண்டு அடுத்த வாரம் அந்த செலவை குறைத்துக்கொள்ள பழக வேண்டும்.

4. சிக்கனமாக இருப்பதற்கு சிறந்த வழி சேமிப்புதான். முதலில் சேமிப்பு, பிறகுதான் செலவு என்ற கொள்கையை கடைபிடித்தால் சிக்கனம் தானாக வந்து விடும். ஆர்.டி, எப்.டி, பிபிஎப் என்று சேமிப்பிற்கு பணம் ஒதுக்கிவிட்டு மீதியை செலவிற்கு ஒதுக்க வேண்டும்.

5. முன்பெல்லாம் நம்முடைய அம்மாக்கள் வீட்டில் ஏதாவது மளிகை பொருட்களோ, காய்கறிகளோ தீர்ந்து விட்டால் இருப்பதை வைத்து சமாளித்தார்கள். அந்தப் பழக்கம் இப்போதைய பெண்களிடம் வர வேண்டும். உடனே போனை எடுத்து ஆர்டர் செய்வது, ஆன்லைனில் வாங்குவது என்ற கலாச்சாரத்தை விட்டு ஒழிக்க வேண்டும்.

6. புதுவிதமான டிஷ் சாப்பிட எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், ஆன்லைனில் ஆர்டர் செய்தால், டேக்ஸ் உடன் சேர்த்து விலையும் அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக யூடியூபில் அதன் செய்முறையை தெரிந்து கொண்டு அதற்கான பொருள்களை கடையில் வாங்கி வந்து வீட்டில் செய்து உண்ணலாம்.

7. பெண்களுக்கு மேட்சிங் பிளவுசில் எம்பிராய்டரி, ஆரி ஒர்க், செய்ய கடையில் அதிகப் பணம் கொடுத்து செய்வதை விட அதைக் கற்றுக்கொண்டு வீட்டில் செய்யலாம்.

8. சிறு பிள்ளைகளைக் கூட டியூஷனுக்கு அனுப்பாமல், வீட்டில் பெற்றோர் சொல்லித் தரலாம்.

9. தொட்டியில் கொத்தமல்லி, கீரை வகைகளை வளர்த்து காய்கறி செலவை சமாளிக்கலாம்.

10. வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன் போன்றவற்றை பண்டிகை சமயங்களில் ஆபரில் வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

11. மளிகை சாமான்களை நிறைய வாங்கி வைத்து புழு, வண்டு விழுந்து வீணாகி தூக்கி எறியாமல் அளவாக வாங்கலாம்.

12. வாராவாரம் குடும்பத்துடன் வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றாமல், மாதம் ஒரு முறை மட்டும் அவுட்டிங் என்று முறைப்படுத்தலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT