உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் எவ்வளவு மக்களால் கொண்டாடப்படுகிறாரோ, அதை விட அதிக நபர்களால் வெறுக்கவும் படுகிறார். இவர் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கான வழிமுறைகளை ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்ததை இந்தப் பதிவில் காண்போம்.
1. சுயத்தை மாற்றிக்கொள்ளாமல் இருத்தல்: பிறர் தன்னை மதிக்க வேண்டும் அல்லது விரும்ப வேண்டும் என்பதற்காக பலர் தனது சுயத்தை மாற்றிக்கொள்ள நினைப்பதால், தன்னைத்தானே பல சமயங்களில் இழந்து விடுவதற்குக் காரணமாக இருப்பதால் எப்பொழுதும் தன்னுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதே உத்தமம். மேலும், யார் போலவும் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தம்மை விரும்புபவர்கள் தம்முடைய குணாதிசயங்கள் தனக்கு பிடித்திருப்பதாகவும் சில இடங்களில் கூறி இருப்பதாக விராட் தெரிவித்துள்ளார்.
2. இறை நம்பிக்கை: எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதிகமாக என்னை கோயிலில் பார்க்க முடியாது. நான் என்னை அறிதல் முறையை நம்புவதால், அமைதியான மன நிலையுடன் இருக்கிறேன். பிடிக்காமல் ஒரு விஷயத்தை செய்வதில் என்ன பயன் இருக்கிறது என்பதால் என்னை மாற்றாமல் எந்த ஒரு விஷயம் எனக்கு பிடித்தாற்போல இருக்கிறதோ அதைச் செய்வதே எனக்குப் பிடிக்கும்.
3. கடின உழைப்பு: வாழ்வில் வெற்றிக் கனியை அடைய ஒன்று தன்னைத்தானே நம்புவது, இரண்டாவது கடின உழைப்பு. நம் பலவீனம் எது? பலம் எது? என்பதை தெரிந்து, பலத்தை மேம்படுத்தி, பலவீனத்தை பலமாக மாற்றுவதில்தான் நம்முடைய சக்தி அடங்கி இருக்கிறது என்பதால் நமக்குத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால், கடின உழைப்போடு வாழ்வில் போராடிக்கொண்டே இருந்தால் வெற்றி ஒரு நாள் வசப்படும். மேலும், தினமும் கண்ணாடியில் நம்மைப் பார்க்கும்போது நாம் என்ன பார்க்கிறோமோ அது உங்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும்.
4. முழு மனதுடன் ஈடுபாடு: வாழ்வில் என்ன செய்ய விரும்பினாலும் அதை முழு மனதோடு எந்தவித கவனச்சிதறலும் இன்றி மனதிற்கு உண்மையாக இருந்து வெற்றியை நோக்கி ஓட வேண்டும். மேலும், உடலைக் கச்சிதமாக வைத்திருப்பது தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்பதால் அதிலும் கவனம் செலுத்துவது நல்லது.
5. கோபம்: விளையாட்டின்போது பல சமயங்களில் கோபத்தைக் காண்பித்தது வெறித்தனமாக விளையாட உதவினாலும் ஆண்டுகள் செல்லச் செல்ல கோபத்தை கட்டுப்படுத்துவதால் கிடைக்கும் நல்ல விளைவுகளை உணரத் தொடங்கினேன். ஆகவே, தேவைப்படும் நேரங்களில் மட்டும் கோபப்பட்டு, மற்ற நேரங்களில் அதை கட்டுப்படுத்துவதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு கூறிய இந்த பயனுள்ள ஐந்து டிப்ஸ்களை கடைப்பிடித்து சந்தோஷ வாழ்க்கைக்கு மாறுவோம்.