American Couple 
வீடு / குடும்பம்

ஆரோக்கியத்துடன் ஒரு நூற்றாண்டு வரை வாழ முடியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமெனில் இயற்கை நிறைந்த சூழலோடு இணைந்து வாழ வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் தம்மைச் சுற்றி இயற்கைச் சூழலை உருவாக்கி நூற்றாண்டுகளைக் கடக்க உறுதியுடன் இருக்கின்றனர் ஒரு தம்பதி. அவர்கள் யார்? நீண்ட நாள் வாழ்வுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

உணவு கலாச்சாரம் மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில், மனிதர்களின் சராசரி வாழ்வு காலம் 50 முதல் 60 ஆண்டுகளாக குறைந்து விட்டன. இதற்கு உணவை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. இயற்கை மிகுந்த சூழல் கூட செயற்கையின் வசம் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், ஒரு நூற்றாண்டுக்கும் மேல் வாழ்பவர்களைக் கண்டால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது. இப்படியான சில அபூர்வ செய்திகளை நாம் எப்போதாவது சமூக வலைத்தளங்களில் பார்ப்பதுண்டு. ஆனால், 30 வயதைக் கடந்த ஒரு அமெரிக்க தம்பதியினர் நாங்கள் ஒரு நூற்றாண்டைக் கடந்து 150 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்வோம் என உறுதி எடுத்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் மிட்வெஸ்ட் நகரைச் சேர்ந்த வாரன் லென்ஸ் (36 வயது) மற்றும் கைலா பார்னஸ் லென்ஸ் (33 வயது) தம்பதியினர், மனம் மற்றும் உடலளவில் ஆரோக்கியத்துடன் நூற்றாண்டைக் கடந்து வாழ திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவின் சராசரி வாழ்நாளான 76 ஆண்டுகளையும் தாண்டி வாழ என்ன செய்ய வேண்டுமோ அதனை தினசரி நடவடிக்கைகளில் மேற்கொள்கின்றனர். உடல் மற்றும் மனதை நேர்மறையாக வைத்துக் கொண்டால், அன்றைய தினத்தை திறம்பட எடுத்துச் செல்ல முடியும் என இவர்கள் நம்புகின்றனர். இதற்காக மின்காந்தப்புல தெரபியுடன் தொடங்குகிறது இவர்களின் காலைப்பொழுது. இதன் பிறகு உடற்பயிற்சி மற்றும் சூரிய வெளிச்சம் பெற நடைபயிற்சியை மேற்கொள்கின்றனர். இதுதவிர செல் பராமரிப்பிற்கு நானோவி என்ற உபகரணம் மற்றும் ஹைப்பர் பேரிக் ஆக்சிஜன் அறை போன்ற ஆரோக்கிய தொழில்நுட்ப சாதனங்கள் உதவுகின்றன.

மாலையில் ஓய்வெடுத்து உடலமைப்பை கட்டமைக்கின்றனர். பிறகு மீண்டும் ஒருமுறை நடைபயணம் மேற்கொண்டு, சூரியன் மறைந்ததும் வெப்ப அறைக்குள் பிரவேசிக்கின்றனர். இயற்கை உணவோடு, இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வீட்டையும் கட்டமைத்துள்ளனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்கள், இரவு நேர தூக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வருங்காலத்தில் குழந்தை பிறந்தால் டி.வி, மொபைல் போன்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும், மண்ணில் எவ்வளவு நேரம் விளையாட வேண்டுமானாலும் விளையாட அனுமதிப்போம் என்றும் தெரிவிக்கின்றனர்.

கைலா பார்னஸ் லென்ஸ் நீண்ட நாள் வாழ்வதற்கான கிளினிக் ஒன்றின் நிறுவனராகவும், வாரன் லென்ஸ் சந்தைப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் தலைமை வருவாய் அதிகாரியாகவும் பணிபுரிகின்றனர். இந்தத் தம்பதியரின் இந்த முயற்சி உயிரியல் முறையில் வயது முதிர்வு குறைவது அல்லது வயது பின்னே செல்வது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பயோஹேக்கிங் முறையுடன் ஒத்திருக்கிறது.

இயற்கை அளித்த வாழ்வில் இயற்கை நெறி மாறாமால், இயற்கையோடு ஒன்றிணைந்தால் நிச்சயமாக நூற்றாண்டு வாழ்வைக் கடக்க முடியும் என்பது இந்த தம்பதியர்களின் எண்ணம். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முடிவெடுத்த இவர்களின் சிந்தனைக்கும், முயற்சிக்கும் வாழ்த்துகள்.

இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை All India Radio-வில் அறிவித்த தமிழ் நடிகர் இவர்தான்!

Eating Veggies and Being Healthy!

சிறுகதை: ஊனம் பலஹீனமல்ல!

இறக்கும் தருவாயில் மக்கள் இந்த 10 விஷயங்களை நினைத்துதான்? 

அரங்கனுக்கே டாக்டரா? யாரப்பா அது?

SCROLL FOR NEXT