ஒவ்வொரு ஆண்டும் பலரும் புத்தாண்டு அன்று சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வது வழக்கம். உதாரணமாக. ‘நான் இந்த ஆண்டு முதல் தினமும் உடற்பயிற்சி செய்யப்போகிறேன். தினமும் ஒரு பத்துப் பக்கமாவது புத்தகம் படிக்கப்போகிறேன்’ என்பது போல அவர்களது தீர்மானம் இருக்கும். ஒரு டைரியில் அவற்றைக் குறித்துக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால், இரண்டு மூன்று நாட்கள் அல்லது சில நாட்கள் மட்டும் தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பின்பு அவற்றை அப்படியே காற்றில் பறக்க விடுவார்கள். அதற்குக் காரணம் அவர்களிடம் மன உறுதி இல்லாததுதான். புத்தாண்டு தீர்மானங்களை எப்படி சிறப்பாக நிறைவேற்றலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தீர்மானங்கள்: முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும். தீர்மானங்கள் என்ற ரெசல்யூஷன் ஒருவர் எடுக்கும் முன்பு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ‘நான் எடுக்கப்போகும் இந்தத் தீர்மானங்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் உதவக்கூடியவை. என்னுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுப்பவை. எனவே, இவற்றை நான் சிறப்பாக செயல்படுத்தினால் என்னுடைய வாழ்வு இன்னும் ஏற்றம் பெறும்’ என்கிற உறுதியான எண்ணம் அவர் மனதில் இருக்க வேண்டும்.
என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை ஒரு பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக. தினமும் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்வது, மாதமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பு செய்வது, வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ ஆன்மிகச் சுற்றுலா செல்வது, வாரம் ஒரு முறை வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்வது, தினமும் டைரி எழுதுவது, அலமாரியை சுத்தமாக வைத்துக் கொள்வது, அலுவலகத்தில் அன்றைய வேலைகளை, பைல்களை அன்றே முடித்து விடுவது, புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்வது, வாரம் ஒரு முறையாவது இரண்டு பேருக்கு உதவுவது போன்ற தீர்மானங்கள் இருக்கலாம். அதேசமயத்தில் என்ன செய்யக்கூடாது என்ற தீர்மானங்களையும் ஒருவர் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
1. தினமும் மொபைல் போன் பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக உபயோகமான செயல் ஒன்றைச் செய்வது.
2. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது என்ற பழக்கத்தை மாற்றி, மாதம் ஒருமுறை என்று தீர்மானம் எடுக்க வேண்டும்.
3. வீட்டை அலங்கோலமாக வைத்திருப்பதை மாற்றுவது.
4. பொழுதுபோக்கு அம்சங்களில் நிறைய நேரத்தை செலவழிப்பதைக் குறைத்துக்கொள்வது.
5. பிறரை குறை சொல்லி பேசுவது, சமூக வலைதளங்களில் மோசமாக கமெண்ட் செய்வது, பிறர் மனம் நோகப் பேசுவதை குறைத்துக்கொள்வது.
6. மது, புகை போன்ற பழக்கங்கள் இருந்தால் அவற்றைத் தவிர்ப்பது.
இதுபோன்ற தீர்மானங்களையும் எடுத்துக் கொண்டால் தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு உடல் நலமும் மன நலமும் பேண முடியும்.
தீர்மானங்களை சிறப்பாக நிறைவேற்றும் வழிகள்:
தீர்மானங்கள் எடுத்தால் போதாது. அவற்றை சரியாக முறைப்படி நிறைவேற்றுவதில்தான் அதில் அதன் சிறப்பே இருக்கிறது. புத்தாண்டு பிறந்த ஜோரில் ஒன்று, இரண்டு நாட்கள் அல்லது ஒன்று இரண்டு வாரங்கள் மட்டும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, பின்பு ‘டைம் இல்ல, போர் அடிக்குது, மறந்துட்டேன்’ என்பது போன்ற தேவையில்லாத காரணங்களை, சாக்குப்போக்குகளை சொல்வது கூடாது.
2. எனவே, தீர்மானங்கள் எடுக்கும் முன்பே இதை உங்களால் செய்ய முடியுமா என்பதை ஆழமாக சிந்தித்த பின்பு முடிவெடுப்பது நலம்.
3. அதேசமயம் தீர்மானங்கள் எடுப்பது தன்னுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தால் சற்றே சிரமப்பட்டாவது அந்தத் தீர்மானங்களை நடத்தி முடிப்போம் என்ற நம்பிக்கை பிறக்கும்.
4. அரிய இந்த மானிடப் பிறவியில் நாம் செய்து முடிக்க வேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கும்போது, நம்மை உயர்த்திக்கொள்ள சிறிது நேரம் தினமும் செலவழித்தால் நன்மை பிறக்கும் என்கிற எண்ணத்தை மனதில் ஆழமாக விதைத்தால் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டத் தோன்றாது.
5. இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து ஒரு செயலை செய்து வந்தால் அதுவே நமது பழக்கமாக மாறிவிடும். எனவே. இருபத்தொரு நாட்களுக்கு, சிரமப்பட்டாவது அந்தச் செயலை எப்படியாவது முடித்து விடுங்கள். பின்பு அது உங்களுடைய பழக்க வழக்கமாக மாறி. உங்களை அறியாமலே செய்து முடிப்பீர்கள்.
6. எடுத்த தீர்மானத்தை தினமும் நிறைவேற்றியதும், ‘அட! சூப்பர்’ என்று உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து பாராட்டிக் கொள்ளுங்கள். தன்னைத்தானே பாராட்டிக்கொள்வது தனி உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
புத்தாண்டுத் தீர்மானம் எடுத்து, அதை நல்ல விதமாய் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.