Helping 
வீடு / குடும்பம்

பிறருக்கு உதவி செய்வதற்கும் பலா மரத்திற்கும் என்ன தொடர்பு?

ராதா ரமேஷ்

ஒவ்வொரு நாளும் நம் கண்முன் விரியும் காட்சிகளில் எத்தனை வண்ணங்கள் இருக்கின்றனவோ அதைப்போலவே மனிதர்களிலும் பல்வேறு இயல்பினை உடையவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை சுழற்சியில், நம் அன்றாட வாழ்க்கையில், நாம் அறிந்தோ அறியாமலோ பலருக்கு உதவி செய்கிறோம், அதே வேளையில் நாமும் பலரிடமிருந்து உதவியை பெறுகிறோம். நாம் பிறருக்கு கொடுப்பதும் பிறரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்வதும் நம்முடைய வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும் ஒரு செயல் ஆகும்.

மனிதர்களிடையே இருக்கக்கூடிய மேம்பட்ட குணங்களில் பிறருக்கு உதவக்கூடிய இந்த கொடை பண்பும் முக்கியமான ஒன்றாகும். எனினும் நாம் பிறருக்கு உதவக்கூடிய பண்பானது பலாமரத்தின் இயல்பினை போன்று இருக்க வேண்டும். அப்படியானால் உதவி செய்வதற்கும் பலாமரத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். அதனைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பலாமரமானது ஒரு போதும் பூப்பதில்லை. ஆனால் மரத்தில் நிறைய காய்கள் வைத்து சுவையான பழங்களை கொடுக்கும் இயல்புடையது. பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் அதன் சுவை தேனைப் போன்று தித்திப்பானது. பலாப்பழம் பழுத்து சாப்பிடுவதற்கு உகந்ததாக மாறிவிட்டால் அதன் வாசத்தின் மூலமே அதனை பிறருக்கு உணர்த்தி விடும் இயல்புடையது. அதுபோல பிறருக்கு உதவும் மனம் உடையவர்கள் யாருக்கு உதவி தேவை என்பதை அவர்கள் சொல்லாமலே அறிந்து  உதவும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று வறுமையைப் பற்றி எந்த ஒரு விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு இருப்பவர்கள் கொடை கொடுப்பதில் முதல் வகையைச் சார்ந்தவர்கள்.மேலும் இவ்வாறு உதவும் மனப்பான்மையை உடையவர்கள் தாங்கள் செய்ததை ஒருபோதும் பிறரிடம் சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். பிறருக்கு உதவுவதால் வரும் புகழையும் பெருமையையும் விரும்பாத இத்தகைய மேலான குணத்தை உடைய இவர்கள்  சான்றோர்களுக்கு நிகராக போற்றப்படுகிறார்கள்!

அதனைப் போன்று பிறரிடம் சென்று உதவி கேட்டால் அவர்கள் உடனே கொடுத்து உதவ மாட்டார்கள். ஏன்? எதற்கு? என்று அலசி ஆராய்ந்து அதன் பின்பே கொடுப்பதா? வேண்டாமா?  என்பதை முடிவு செய்வார்கள். இத்தகைய இயல்பினை உடையவர்கள் கொடை கொடுப்பதில் இரண்டாம் வகையினரான மாமரத்தின் இயல்பினை உடையவர்கள். மாமரமானது பூத்து, காய்த்து, அதன் பின்பே கனி கொடுக்கும் இயல்புடையது. அதைப்போல இத்தகைய இயல்புடையவர்களிடம் உதவி பெறுவதற்கு ஒருவரின்  நிலை குறித்த விவரங்களை விளக்க வேண்டி  இருக்கும். அவ்வாறு விளக்கிய பின் அதனை அலசி, ஆராய்ந்து அவர்கள் மனதிற்கு உண்மை என உணர்ந்த பிறகே பிறருக்கு உதவி செய்ய முன்வருவார்கள். மேலும்  இவர்கள் பிறருக்கு உதவி செய்தவுடன் இன்ன இன்னார்க்கு இன்ன இன்ன உதவி செய்தோம் என்று சொல்லிக் கொள்வதிலும் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு உதவுவதிலே மட்டும் மனநிறைவு கொள்ளாமல் அதனால் தமக்கு பேரும் புகழும் வந்தடைய வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

மூன்றாவது ஒரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் பாதாள பூதத்தைப் போன்றவர்கள். எப்போதும் பணத்தை இரும்பு பெட்டிகளில் வைத்து பூதம் காப்பது போல் காத்துக்கொண்டே இருப்பார்கள். பிறர் வந்து உதவி கேட்டால், 'செய்கிறோம்! செய்கிறோம்!' என்று சொல்வார்களே தவிர, மனதார உதவி செய்யவே மாட்டார்கள். இவர்கள் பாதிரி பூவின் இயல்பினை உடையவர்கள். பாதிரிப்பூ பூக்குமே தவிர காய்க்காது. எனவே அதனால் பலன் ஒன்றும் இல்லை. காலம் முழுவதும் செய்கிறோம் செய்கிறோம் என்றோ, அல்லது அந்தக் கொடையினை  பற்றி  அறியாதவர்களிடம் 'நாங்கள் மற்றவர்களுக்கு செய்தோம்! செய்தோம்!'  என்றோ கூறிக்கொண்டே பூதம் அடைகாப்பது போல இவர்கள் பணத்தை பாதுகாத்து வரும் இயல்பினை கொண்டவர்கள்.

இவ்வாறு பிறருக்கு உதவுவதில் மூன்று வகை இயல்பினை உடைய மனிதர்கள் இருக்கிறார்கள் என்று மாபெரும் புலவரான ஔவையார் தன்னுடைய தனிப்பாடல்கள் என்ற நூலில் குறிப்பிடுகிறார். நாமும் எப்பொழுதும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும், நம்மை தேடி வருகிறவர்களிடமும் பலாமரத்தின் இயல்பினை போன்று அவர்கள் கேட்காமலே உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சிறந்த பண்புள்ள மனிதர்களாக நம்மை நாம் வளர்த்துக் கொள்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இங்கு உதவி என்றதும் விலைமதிப்புள்ள பொருட்களாகவோ, பணமாகவோ இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தன் நிலை அறிந்து அதற்கேற்ப உதவினாலே போதும்.

கிரிப்டோவில் முதலீடு செய்வது சரியான யுக்தியா?

தண்ணீர் குடிப்பதற்கு இத்தனை விதிமுறைகளா? இது தெரியாம போச்சே!

சீதையின் அருள் பெற்ற அனுமன்!

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

SCROLL FOR NEXT