திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால் திருமணத்திற்கு பின்பு அதைத் தொடர முடிவதில்லை. குழந்தை பிறப்பு, வளர்ப்பு என்ற பல காரணங்களால் நீண்ட இடைவெளிக்கு பின்பு அவர்கள் வேலைக்குச் செல்லும் அவசியம் ஏற்படலாம். அப்போது அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. தேவையின் காரணமாக மீண்டும் வேலை தேடும்போது கல்வி அனுபவம் திறமைகள் போன்றவற்றை சரியாக மதிப்பீடு செய்து அதற்கு தகுந்த வேலை தேட வேண்டும்.
2. ரெஸ்யூமை புதுப்பிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பல திறமைகளை தகுதிகளை சேர்த்துக் கொண்டிருக்கலாம். அவற்றை மறக்காமல் ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டும்.
3. உங்களை அந்த வேலைக்கு தகுந்த மாதிரி அப்டேட் செய்து கொள்ள வேண்டும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வேண்டும் கருத்தரங்குகள், செமினார்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு புதிய டெக்னிகள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. உங்கள் பழைய அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். புதிய வேலை சம்பந்தமான சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் பழைய அலுவலகத்திலேயே வேலை வாய்ப்புகள் இருந்தால் அவர்கள் உங்களுக்கு தெரிவிப்பார்கள்.
5. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலைக்குச் செல்லும் போது ஒரு வித தயக்கமும் பயமும் வரலாம். அவற்றை தூக்கி எறிந்து விட்டு தகுதியையும் திறமையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உங்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பகுதி நேர வேலையா அல்லது முழு நேர வேலையா என்பதில் கவனம் வைக்க வேண்டும். மிகவும் நம்பிக்கையுடன் அட்டென்ட் செய்ய வேண்டும்
6. புதிய வேலையில் சேரும்போது ஏற்கனவே நீங்கள் பணிபுரிந்த அனுபவத்தையும் திறமைகளையும் பற்றி புதிய அலுவலக மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும் அதற்கு தகுந்த மாதிரியான வேலைகளை அவர் உங்களுக்கு வழங்கக்கூடும்.
7. புதிய வேலையில் சேர்ந்ததும் அங்குள்ளவர்களிடம் நட்புறவு பாராட்ட வேண்டும். நீண்ட காலம் கழித்து வேலைக்கு சேர்ந்ததால் நீங்கள் அங்குள்ள இளைஞர்களை விட வயது அதிகமானவராக இருக்கக்கூடும். ஆனாலும் அவர்களுடன் இனிமையாகவும் அன்புடனும் பழகினால் அவர்கள் உங்களை மதித்து நண்பராக ஏற்றுக் கொள்வார்கள். அதனால் உற்சாகத்துடன் வேலை பார்க்க முடியும்.
8. வேலையையும் வீட்டையும் நன்றாக பேலன்ஸ் செய்து கொள்ள பழக வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைத்து உற்சாகத்துடன் வேலை செய்ய வேண்டும். உங்கள் வேலையில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதைப் பற்றிய ஃபீட்பேக் வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு உங்களிடம் இருக்கும் தவறுகளை மாற்றிக் கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்.
9. எல்லா நேரத்திலும் ஒரு நேர்மறையான போக்கை கடைபிடிக்க வேண்டும். புதிய வேலை கடினமாக இருந்தாலும் இந்த நேர்மறைப் போக்கு அதை எளிதாக்கிவிடும்.
10. புதிய சூழ்நிலையில் பணிபுரிய நேரும்போது அதற்கு தக்கவாறு உங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். புதிய பணியில் உள்ள மாற்றங்களுக்கு தகுந்தபடி உங்களை மாற்றிக்கொண்டால், நீங்கள் நல்ல ஒரு பணியாளராக நிச்சயமாக பணிபுரிய முடியும்.