4 Life Lessons Kintsugi Taught Me! 
Motivation

கிஞ்சுகி (Kintsugi) எனக்கு உணர்த்திய 4 வாழ்க்கைப் பாடங்கள்! 

கிரி கணபதி

ஒரு பொருள் உடைந்துவிட்டால் அதை நாம் என்ன செய்ய நினைப்போம்? பொதுவாக அப்புறப்படுத்துவோம் தானே? ஆனால் ஜப்பானிய கலை வடிவங்களில் ஒன்றான கிஞ்சுகி, உடைந்த பொருட்களுக்கு புதிய உயிரைக் கொடுக்கிறது. இது வெறும் பொருளை சரி செய்ய மட்டுமல்ல, உடைந்த பொருளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை புதிய படைப்பாக மாற்றுவதாகும். இந்த கலை வடிவம் எனக்கு கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்களை இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

கிஞ்சுகி (Kintsugi) என்பது உடைந்த பீங்கான், மண்பாண்டங்கள் போன்றவற்றை மீண்டும் இணைக்கும் ஒரு ஜப்பானியக் கலை வடிவமாகும். உடைந்த பகுதிகளை இணைக்கும்போது, உடைந்த இடங்களில் தங்கம் அல்லது வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகப் பொடிகளைப் பயன்படுத்தி அதை ஒரு கலைப் படைப்பாக மாற்றுவதுதான் கிஞ்சுகி. 

Kintsugi எனக்கு கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்: 

1. தோல்விகள் முடிவல்ல: ஒரு உடைந்த பொருளை எப்படி பார்க்க வேண்டும் என்பதை இந்த கலைபடைப்பு முறை எனக்கு கற்றுத் தந்தது. வாழ்க்கையில் நாம் பல தோல்விகளை சந்திக்க நேரிடும். அந்த தோல்விகள் நம்மை முழுமையாக உடைத்துவிடலாம். ஆனால், கிஞ்சுகியைப் போல, நாம் நம்மை ஒரு புதிய படைப்பாக உருமாற்ற முடியும். நம்முடைய தவறுகள் மற்றும் தோல்விகள் நம்மை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் வாய்ப்புகளாக இருக்கலாம்.

2. குறைகளை நிறைகளாக மாற்றலாம்: கிஞ்சுகியில் உடைந்த இடங்களில் தங்கம் அல்லது வெள்ளி பொருத்தப்பட்டு, அந்த பொருளுக்கு தனித்துவமான அழகைக் கொடுக்கிறது.‌ இது என்னுடைய குறைகள் பற்றிய கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது. நம்முடைய குறைகள் பிறரிடமிருந்து நம்மை வேறுபடுத்தும் ஒரு அடையாளமாக இருக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

3. புதிய தொடக்கம்: நம் வாழ்வில் நாம் தற்போது எந்த நிலையில் இருந்தாலும், அங்கிருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, புதியதொரு வாழ்க்கையை தொடங்க முடியும் என்பதை கிஞ்சுகி எனக்கு உணர்த்தியது. எந்த மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் நம்மால் அதிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கையை புதிய திசைக்கு கொண்டுச் செல்ல முடியும். இதை நாம் அனைவருமே நம்ப வேண்டும். 

4. வாழ்க்கையின் மதிப்பு: ஒரு சாதாரண மண்பாண்டத்தின் மதிப்பு உடைந்த பிறகு தங்கம் சேர்க்கப்பட்டு உயரிய மதிப்பை அடைகிறது.  நாமும் இதே போல நம்முடைய கடினமான சூழல்களில், தொடர்ச்சியாக பல விஷயங்களை முயற்சித்தால், நம்முடைய மதிப்பை உயர்த்திக் கொள்ளலாம். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நல்லது, கெட்டது அனைத்தும் ஒன்றாக இணைந்தே இன்று நம்மை ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.‌ எனவே, நாம் செய்யும் எதுவுமே வீணாகிப் போகாது. 

இப்படி, பல விஷயங்களைக் கிஞ்சுகி கலைப்படைப்பு முறை எனக்கு உணர்த்தியது. இது நிச்சயம் உங்களுக்கும் உதவியாக இருந்திருக்கும் என நம்புகிறேன். 

தக்காளி பாத் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! 

குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!

சிறுகதை – மரியாதை!

ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? 

SCROLL FOR NEXT