1. நிரந்தரம் (Vs) தற்காலிகம்
20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கும் பெரும் பாலானோர் இலக்கு ஏதும் இல்லாமல் காலத்தை ஓட்டுபவர்கள். என்ஜாய் பண்ணுவது மட்டும் வாழ்வின் இலக்காகக் கொண்டு இருப்பவர்கள். உங்கள் வாழ்வில் இப்போது உள்ளவர்கள் எல்லாம் நிரந்தரமானவர்கள் என்று எண்ணி வாழ்பவர்கள். ஆனால், அது முட்டாள் தனம். அது நட்பாக இருக்கட்டும், காதலாக இருக்கட்டும், மற்ற உறவுகளாக இருக்கட்டும், உங்கள் வாழ்வில் பலர் வருவார்கள் போவார்கள் அவர்களில் தற்காலிக மானவர்கள் யார்? நிரந்தரமானவர்கள் யார் ? என்று நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், காலம் உங்களை வலுக்கட்டாயமாகப் புரிந்து கொள்ள வைக்கும்.
2. உன்னை நீயே காப்பாற்றிக்கொள்
இன்று நாம் யாருடன் பழகுவது என்பது கூட ஒரு ஆதாயத்திற்காகத்தான் என்று ஆகிவிட்டது. அவர்களுடன் பழகினால் பணம் கிடைக்கும். இவருடன் பழகினால் பதவி கிடைக்கும் என்றெல்லாம் எண்ணித்தான் பழகுகிறோம். இப்படி ஆதாயத்திற்காகப் பழகும்போது, உங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவர்கள் யாரும் துணைக்கு வரப் போவதில்லை. நீங்களும் யாருக்கும் துணைக்குப் போக மாட்டீர்கள். இதுதான் உண்மை. அதனால் ஆதாயம் தேடாமல் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.
3. தொடர்ந்து செயல்படு; வெற்றி உண்டு.
இன்றைய மனநிலை எப்படி உள்ளது என்றால் ஒன்று ஆரம்பித்தால் உடனடியாக வெற்றி பெறவேண்டும் என்று எண்ணுவது. அப்படியில்லை என்றால் தோற்றுவிட்டோம் என்று உடனடியாக அதனை விட்டுவிட்டு வேறு செயலைப் பார்க்கச் சென்றுவிடுவது. ஒன்று புரிந்துகொள்ளுங்கள். தோற்றுபோவது என்று எதுவுமில்லை. ஒரு செயலை ஆரம்பித்தால் அதனைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதற்கு வெற்றி கிடைத்தாலும் தோல்வி கிடைத்தாலும் தொடர்ந்து செய்யும் திறனே உங்களை வெற்றி பெறச் செய்யும்.
4. இந்த இரண்டு வலைகளில் விழாதே
ஒரு செயலை நாம் செய்யலாம் என்று திட்டமிட்டு வைப்போம். ஆனால் அதனைத் தொடங்கும் முன் அவர்கள் என்ன சொல்லுவார்கள், இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று தயங்கி, அந்த செயலையே தொடங்கமாட்டோம்.
அடுத்து, ‘மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்’ என்று சிந்திப்பது. இந்த இரண்டு எண்ணங்களும் ஒரு போதும் நம்மை வாழ்வில் முன்னேற விடாது. நிம்மதியாக வாழவும் முடியாது. இந்த எண்ண வலையில் விழுந்தால் எழுவது கடினம்.
5. தெரியாததைக் கற்றுக்கொள்
நமக்கு எதுவும் தெரியவில்லை என்று ஒரு எண்ணமும், ஒரு தருணமும் வரும், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதைவிட்டு எல்லாம் எனக்கும் தெரியும் என்ற எண்ணம் நம்மையும், நம் வாழ்வையும் தலைகீழாக மாற்றிவிடும். அதனால் தெரியாததை ‘தெரியாது என்று ஒப்புக்கொள்வோம். அந்த ‘தெரியாத’ விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
இந்த ஐந்தையும் 30 வயதுக்கு முன் புரிந்துகொண்டால் உங்கள் வாழ்வில் கண்டிப்பாக நீங்கள்தான் ராஜா.