வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், உங்களுடைய கனவுகளை அடைவதற்கும் ஒழுக்கம் ஒரு முக்கியமான திறவுகோலாக அமைகிறது. அந்த வகையில் உங்களுடைய இலக்குகளில் கூர்ந்து கவனம் செலுத்தவும், ஒழுக்கமாக நடந்து கொள்ளவும் உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை பார்க்கலாம்.
1. தெளிவான இலக்குகளை அமைப்பது:
உங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும், ஒழுக்கமாக இருப்பதற்கும் உதவக்கூடிய ஒரு காரணத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அதற்கு உங்களிடம் தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும்.
2. தினசரி வழக்கத்தை பின்பற்றுதல்:
உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலமாக ஒழுக்கத்தை வளர்க்கலாம். உங்களை மேம்படுத்தக்கூடிய விஷயத்தை தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டிருக்கும்பொழுது அது உங்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.
3. முன்னேற்றத்தை கொண்டாடுதல்:
ஒரு சிறிய இலக்காக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு வேலையை செய்து முடித்தாலும் சரி அதனை கொண்டாட மறவாதீர்கள். உங்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி, நீங்கள் சாதித்த விஷயத்தை நீங்கள் கொண்டாடும்பொழுது உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
4. ஒழுங்கமைப்பை பின்பற்றுதல்:
பணியிடத்தில் எல்லா விஷயங்களிலும் ஒழுங்கமைப்பு மற்றும் சுத்தத்தை பின்பற்றுங்கள். வண்ணமயமான காலண்டர்கள், செய்ய வேண்டிய பட்டியல்கள் (to-do-list) டைரி மற்றும் ஸ்டிக் நோட்ஸ் போன்றவை உங்களுடைய அன்றாட வேலைகளை கையாளுவதற்கும், ஒழுங்கமைக்கவும் உதவும். நீங்கள் வேலை செய்யும் இடத்தை சீரமைக்கவும், அழகுப்படுத்தவும் முயற்சி எடுப்பதன் மூலமாக வேலை செய்வதை சௌகரியமாக உணர்வீர்கள்.
5. நேர மேலாண்மையை பின்பற்றுதல்:
உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்துவது அவசியம். உங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை டெட்லைன்களுக்கு முன்னமே முடிப்பது மற்றும் விஷயங்கள் கைமீறி போவதை தவிர்ப்பதற்கு இந்த நேர மேலாண்மை உதவும். இதனால் உங்களின் வேலைப்பளு அதிகரிக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
6. சுய கட்டுப்பாட்டை வளர்த்தல்:
கடுமையாக உழைப்பது முக்கியம்தான் என்றாலும் கூட அவ்வப்போது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவதும் அவசியம். எனவே எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கட்டுப்பாட்டை பெறுவதற்கு ஒழுக்கம் அவசியம். இது காலப்போக்கில் உங்களை உயர்ந்த நிலையில் கொண்டு சேர்க்கும்.
7. நேர்மறையான எண்ணப் போக்கு:
உங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் கடுமையாக உழைப்பதன் மூலமாகவும் எதையும் சாதித்து விடலாம் என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நேர்மறையான யோசனைகள் உங்களுக்கு ஊக்கத்தையும், உங்களுடைய இலக்குகளை நோக்கி வேலை செய்வதற்கான ஒரு உந்துதலையும் அளிக்கும். இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.
8. உங்களுடைய முன்னெற்றத்தை கண்காணித்தல்:
உங்களின் அன்றாட வளர்ச்சியை கண்காணிப்பது மற்றும் நீங்கள் என்ன வேலையை செய்து முடித்திருக்கிறீர்கள் என்பதை மாத இறுதியிலோ அல்லது வார இறுதியிலோ ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்த பிறகு அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.