ஒரு நல்ல மனிதனாக நாம் நம்மை உணர்வது ஒரு சிக்கலான மற்றும் அத்தனை எளிதில் கிடைக்காத அனுபவம். அப்போ நம் குணத்தை நாமே எப்படி புரிந்து கொள்வது? நாம் நல்லவரா? என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?அதை பற்றி தெரிந்து கொள்வோம்
உள்ளார்ந்த நன்மை:
மக்கள் இயல்பாகவே தாங்கள் நல்லவர்கள் தான் என்று நம்புகிறார்கள். ஒரு கோவிலுக்கு போகும் போது வெளியே உட்கார்ந்து இருக்கும் நபர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தர்மம் போடுவதிலிருந்து, ஆபத்தில் இருப்போரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காப்பாற்றுவது போன்ற விஷயங்கள் வரை, நம் உள்ளத்தில் எங்கோ ஒர் ஓரத்தில் நாம் இன்னும் நல்ல மனிதராக தான் இருக்கிறோம் என்று உணர்கிறார்கள்.
ஒரு "நல்ல" நபரின் குணங்கள்:
எது நல்லது என்பது கலாச்சார ரீதியாக மாறுபடும். ஆனால் சில பண்புகள் உலகளவில் மதிக்கப்படுகின்றன. இரக்கம், பரிதாபம் , நேர்மை மற்றும் அக்கறை ஆகியவை இதில் அடங்கும். இந்த குணங்களைப் பற்றி சிந்திப்பது உங்களுடைய நற்குணத்தை அளவிட உதவும். காரணம் இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாகவே தோன்றினால், ‘வேறுயாரும் உங்களுக்கு சான்றிதழ் அளிக்க தேவையில்லை’. நீங்கள் உண்மையிலே நல்லவர் என்பது உங்களுக்கே தெரியும்.
மனித நேயத்தை காப்பாற்றுவது :
மனிதாபிமானத்தை கடைப்பிடிப்பது ஒவ்வொருவரது வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகும். இன்றைய அதிவேக இயந்திர காலகட்டத்தில் நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது நிலைநிறுத்திக்கொள்ளவோ இரவும் பகலும் பாராமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதற்கு நடுவில் யாரோ நம்மிடம் ஒரு உதவியை நாடும் போது எந்த ஒரு தயக்கமும் இன்றி நாம் இறங்கி வந்து உதவினாலே அந்த இடத்தில் மனித நேயத்திற்கான நல்ல குணம் உங்களிடம் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கருணை செயல்கள்:
கருணைச் செயல்கள் நன்மையைக் காட்டுகின்றன. வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுப்பது; அதை வளர்கிறோமோ இல்லையோ, தொந்தரவு கொடுக்காமல் இருப்பது; நாம் பயணிக்கும் போது வழியில் யாராவது விபத்தில் சிக்கியிருந்தால் நம் நேரத்தை பொருட்படுத்தாமல், கருணை எண்ணத்தோடு உதவ முன் வருவது போன்ற விஷயங்களும், ஒரு நல்ல மனிதருக்கான சான்றுகளாகும்.
இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்கள் பலரும் யாரோ ஒருவருக்காகவோ அல்லது ஒரு சமூகத்திற்காகவோ நல்லது செய்து வாழ்கிறார்கள். சில மனிதர்கள் நாம் இப்போதைக்கு இந்த நல்ல காரியத்தை( அது தானமோ, தர்மமோ, உதவியோ) செய்தால், பின்னால் நமக்கு பெரிய நன்மை உண்டாகும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் அது இறுதியில் நம் சுயநலத்தை தான் வெளிக்காட்டுகிறது. தவிர அது, உண்மையான நல்ல குணம் இல்லை.