நம்மை யாரும் தவறாக பேசிவிடக்கூடாது என்பதில் நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருப்போம். ஒருவேளை யாராவது நம்மை விமர்சனம் செய்துவிட்டால், அதை நினைத்து மிகவும் வருத்தப்படுவோம். இந்தப் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? அப்போ இந்தக் கதையைக் கட்டாயம் படியுங்கள்.
ஒரு ஊரில் ஒரு பெண்மணி இருந்தாராம். அவருக்கு மிகவும் மென்மையான மனது. யாராவது ஏதேனும் சொன்னால் அதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இப்படியிருக்கும் அவரின் வாழ்க்கையில் ஒருகாலக்கட்டத்தில் நிறைய பேர் அவரை தவறாக புரிந்துக் கொண்டனர், நிறைய பேர் அவரை விமர்சனம் செய்தனர்.
அடுத்தவர்கள் பேசும் வார்த்தைகளைக் கேட்டு இந்த பெண்மணி தூக்கமின்றி தவித்தார். அதனாலேயே, அவருக்கு ஒரு வியாதி வந்தது. அந்த வியாதியைப் போக்க ஒவ்வொரு நாளும் கசப்பான ஒரு மருந்தை சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி ஒவ்வொரு நாளும் மருந்து சாப்பிடும்போது அந்த பெண்மணிக்கு தோன்றும், ‘நமக்கு இந்த வியாதி வந்ததற்கு காரணம் யாரோ! ஆனால், இந்த கசப்பான மருந்தை சாப்பிடுவது நாமாக இருக்கிறோமே' என்ற எண்ணம் வருமாம்.
இந்த கதையில் வருவதுப்போலத்தான் அடுத்தவர்கள் நினைத்து நாம் வேதனைப்பட்டு நம் உடல் நிலையையும், மனநிலையையும் கெடுத்துக்கொண்டால், அதன் பலனை அவர்கள் அனுபவிக்க போவதில்லை நாம்தான் அனுபவிக்கப் போகிறோம். ஒவ்வொரு நாளும் கசப்பான மருந்தை நாமே உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
நாம் கஷ்டப்படும் வேளையில் நம்மை விமர்சித்தவர்கள் எங்கே என்று தேடினால், அவர்கள் வேறு யாரையாவது விமர்சிக்க சென்றிருப்பார்கள். இதுபோன்ற குணமுடையவர்கள் நம்மை புரிந்துக்கொள்ளவில்லையே? நம் நல்ல மனதை உணரவில்லையே? என்று எண்ணி வருத்தப்படுவது வீணாகும். இவர்களுக்கு நம் குணத்தை உணர்த்தி என்னவாகப் போகிறது? இப்படி உலகில் உள்ள ஒவ்வொருவரிடமும் நம்மைப் பற்றி எடுத்து சொல்லிக்கொண்டேயிருக்க முடியுமா? பேசுபவர்கள் பேசட்டும், விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நாம் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வோம்.