Are you looking for happiness outside? Then read this story! Image Credits: Adobe stock
Motivation

சந்தோஷத்தை வெளியிலே தேடறீங்களா? அப்போ இந்த கதையைக் கொஞ்சம் படிங்க!

நான்சி மலர்

ற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நிறைய மக்களின் முக்கியமான பிரச்னை சந்தோஷம், மகிழ்ச்சி, மனநிம்மதியை எப்படி பெறுவது என்பதுதான். காசு, பணம் என்பது தேவைக்கு அதிகமாகவேயிருந்தாலும் மனதில் மகிழ்ச்சியில்லை என்பது நிறையப் பேரை வாட்டி எடுக்கும் பிரச்னையாகும். அப்படி நீங்களும் மகிழ்ச்சியை வெளியிலே தேடிக்கொண்டிருந்தீர்கள் என்றால், இந்தக் கதை உங்களுக்குத்தான் முழுமையாக படியுங்கள்.

ஒரு ஊரில் ஒரு மிகப்பெரிய பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவருடைய ஊருக்கு துறவி ஒருவர் வருவதை தெரிந்துக்கொண்டு தன் வீட்டில் உள்ள பணம், நகை அனைத்தையும் ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்று அந்த துறவியின் முன்பு வைத்துவிட்டு, ‘சாமி! என்னிடமிருக்கும் மொத்த சொத்தையும் உங்களிடம் கொண்டு வந்து வைத்துள்ளேன். இது அனைத்தையும் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு நிம்மதி, சந்தோஷத்தை எப்படி பெறுவது என்பதற்கு மட்டும் ஏதேனும் வழியிருந்தால் சொல்லுங்கள்?’ என்று கேட்கிறார்.

இதைக்கேட்ட துறவி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பிக்கிறார். இதைப்பார்த்த பணக்காரர், ‘ஒருவேளை இவர் ஒரு போலி சாமியாராக இருப்பாரோ?’ என்று யோசித்து அந்த துறவியின் பின்னாடி பயந்துக்கொண்டே ஓட ஆரம்பிக்கிறார். ஆனால், அந்த துறவியை பணக்காரரால் பிடிக்கவே முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து, அந்த துறவியே பணக்காரரின் முன் வந்து நின்று அந்த பணப்பையை ஒப்படைக்கிறார். இப்போது அந்த பணக்காரரால் சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. அப்போது அந்த துறவி கேட்கிறார், ‘இதற்கு முன்பும் இந்த பணமும், நகையும் உன்னிடமிருந்தது. அப்போது உனக்கு கிடைக்காத சந்தோஷம் இப்போது எங்கிருந்து வந்தது’ என்று கேட்டார்.

இதை கேட்ட பணக்காரருக்கு அப்போதுதான் புரிந்ததாம், சந்தோஷம், நிம்மதி என்பது நம்மிடம்தான் இருக்கிறது. அதை வெளியே தேடுவதை விட்டு விட்டு நம்மிடம் இருப்பதை வைத்து நிம்மதியாக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். இதை தெளிவாக புரிந்துக்கொண்ட பணக்காரர் துறவிக்கு நன்றிக் கூறிவிட்டு சென்றார்.

இந்தக் கதையில் வந்ததுப்போலத்தான் மகிழ்ச்சியை வெளியிலேயிருந்து காசு கொடுத்து வாங்கிவிட முடியும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு உங்களுக்குள்ளேயே தேடுங்கள். ஏனெனில், அது ஒளிந்திருப்பது அங்கேதான். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

முகப்பரு ஏற்படுவதற்கான காரணமும், அதனை தடுக்கும் வழிமுறைகளும்!

விமர்சனம் வேட்டையன்: 'குறி வெச்சா இரை விழணும்' - சிறு குறைகள் இருந்தாலும் வச்ச குறி தப்பல!

மழை குறித்து பல்வேறு ஆச்சர்யத் தகவல்கள்!

பிரபஞ்சத்தைப் படைத்தது கடவுளா, இயற்கையா, அறிவியலா? 

முதுமைக்கால நோய்களைத் தவிர்க்க ஆராய்ச்சி முடிவுகள் கூறும் ஆலோசனைகள்!

SCROLL FOR NEXT