self trust 
Motivation

தன்னம்பிக்கையே தனிப் பெரும் வெற்றி!

ம.வசந்தி

னிதனுக்குக் கைகள் இரண்டு, ஆனால் மூன்றாவது கையான தன்னம்பிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இத்தகைய தன்னம்பிக்கையைச் சரியாகப் பயன்படுத்தினால் மனித வாழ்வினில் சாதனைகள் பல புரிந்து சரித்திரம் படைக்கலாம்.

தன்னம்பிக்கை இன்மையினால் உடல் உரம் படைத்த பல பேர் நடைபிணம் போன்று வாழ்கின்றனர்.

தன்னம்பிக்கையை வளர்ப்பது மிக எளிது. அதற்கு உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைக்க வேண்டும்.

உங்களிடம் ஏதாவது ஒரு தனித்திறமை மறைந்திருக்கும். அதை இனம் கண்டுகொள்ள வேண்டும்.

அது சிந்தனை, நினைவு ஆற்றலாகவோ, செயல் திறனாகவோ, எழுத்து, பேச்சு, கற்பனை, விளையாட்டு, மொழிப்புலமை, ஓவியம், பாடும் திறன், நடிப்பு, படிப்பு இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

இப்படி இனம் கண்ட அத்தனை திறமையையும் உயர்ந்த இலக்கோடு நன்றாக வளர்த்திட வேண்டும். பயனுள்ளதாய் ஆக்கிட வேண்டும். அப்போது வாழ்க்கையில் முன்னேற்றம் தானாகவே ஏற்படும்.

வாய்ப்பு வரும். அதிர்ஷ்டம் வரும் என்று காத்திருப்பதைத் தவிர்த்து, நீங்களே வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் திறமை இருந்தால் வாய்ப்புகள் தாமாகவே வரும்.

உங்கள் திறமைகளை நீங்களே அழிக்காதவரை, எந்தச்  சக்தியும் உங்களை வெற்றி கொள்ள இயலாது

தன்னம்பிக்கையும் முயற்சியும் உடையவருக்கு எதிர்ப்புகளும் தோல்விகளும் தடைக்கற்கள் ஆவதில்லை.

உயரிய எண்ணமும், உணர்வும், தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் ஒருவனுக்கு இருந்தால் அவன்தான் எண்ணியதை எண்ணியபடி எளிதில் எய்துவான். காலம் பொன்னானது. காலம் வீணாவதைத் தவிர்க்கவேண்டும்.

நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும். இந்த முன்னேற்றம் நம் சிந்தனை, செயல், அறிவு, உழைப்பு, உடல் மற்றும் மனவலிமை, நற்குணங்கள் மற்றும் சேமிப்பு என எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்.

வாழ்ந்து முடிந்த வாழ்க்கையின் அனுபவங்களை படிக்கட்டுக்களாக்கி நாளைய வெற்றி வாழ்விற்கு வழி வகுத்து இன்றைய வாழ்க்கையை நடத்த வேண்டும்.

சிலர் எந்தச் சூழலிலும் தன்னம்பிக்கை இழக்காமல் வெற்றி நடைபோடும் மனப்பக்குவம் கொண்டிருப்பர்.

அவர் இயல்பாகவே தன்னம்பிக்கை உடையவராகவோ அனுபவம் மூலமாகவோ அல்லது பெற்றோர், ஆசிரியர், பிறர் மூலமாகவோ தன்னம்பிக்கை பெற்றிருக்கலாம்.

எவ்விதம் தன்னம்பிக்கையை வளர்த்தாலும் நிச்சயம் மனித வாழ்க்கைக்கு நற்பயனைத் தரும்.

தகுதிக்குமேல் தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் தத்தளிப்பவர்களும் உள்ளனர். எவ்வாறாகிலும் தீர்த்து விடலாம் என்று அதிகக் கடன்வாங்கி, தகுதிக்கு மிஞ்சிய பெரிய வீட்டைக் கட்டி அல்லலுறுபவர்களையும் நாம் காண்கின்றோம்.

தோல்வி என்பது மனப்பீடையையும், பதட்டத்தையும் உருவாக்கும். ஆனால் தன்னம்பிக்கையும் விவேகமும் உள்ள மனிதனுக்குத் தோல்வி என்பது பள்ளத்தாக்கல்ல. அடைய வேண்டிய சிகரத்தை காட்டும் வழியாகும்.

ஆகவே தன்னம்பிக்கையோடு தளராமல் தன்னிகரில்லாத மனிதராக வலம் வர முயற்சிப்போம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT