நாம் பிறரிடம் கேட்கும் கேள்விகளே நமது சந்தேகங்களைப் போக்கி நமது அறிவை உயர்த்தி நம் வாழ்வினையும் உயர்த்தும். ஆனால் நம் வாழ்வில் பிறரிடம் கேட்கக் கூடாத கேள்விகள் சில இருக்கின்றன. பிறருடைய மனதை புண்படுத்தும் என்பதால் சில கேள்விகளைக் கேட்கக் கூடாது. சில கேள்விகளை எக்காரணத்தைக் கொண்டும் கேட்கவே கூடாது. அப்படி என்ன கேள்விகள் அவை. வாருங்கள் இந்த பதிவில் நாம் தெரிந்து கொண்டு புரிந்து கொள்ளுவோம். இன்றிலிருந்து இத்தகைய கேள்விகளை பிறரிடம் கேட்பதையும் தவிர்ப்போம்.
நமக்குத் தெரிந்தவர் உறவினர் எவரேனும் தங்களுடைய இல்லத் திருமணத்திற்கு நம்மை அழைக்க வரும்போது நம்மில் பலர் கேட்கும் கேள்விகள் சில உள்ளன. உங்கள் சம்பந்தி வசதியானவரா? அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுகிறீர்கள்? மாப்பிள்ளை எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார்? இவைதான் நாம் வழக்கமாக கேட்கும் கேள்விகள். எனக்குத் தெரிந்து எல்லோருமே இந்த தவறைத் தவறாமல் செய்கிறோம். சொல்லப்போனால் இவையெல்லாம் கேட்கக் கூடாத கேள்விகளே. இதையெல்லாம் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். இத்தகைய கேள்விகள் அழைக்க வருவபர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் கேள்விகள் என்பதை உணரவேண்டும்.
திருமணம் முதலான விசேஷங்களுக்கு உங்களை அழைக்க வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அழைப்பிதழை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வந்தவரிடம் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய என் வாழ்த்துகள். எல்லாம் நல்லபடியா நடக்கும். ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம என்கிட்டே கேளுங்க. என்னால முடிஞ்ச உதவியைச் செய்யறேன்.
தற்காலத்தில் நம்மில் பலர் தங்கள் உறவினரிடமும் நண்பர்களிடமும் ஒரு கேள்வியை சர்வசாதாரணமாகக் கேட்டு விடுகிறார்கள். “இன்னும் ஏன் உங்க பொண்ணுக்கு / பையனுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கீங்க?” இதுதான் அந்த கேள்வி. உங்களை விட பெண்ணையோ பையனையோ பெற்ற அவர்களுக்கு இதில் அதிக அக்கறை இருக்கும். அவர்களின் சூழ்நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஜாதகம் பொருந்தி வராமல் இருக்கலாம். பணப்பிரச்னை இருக்கலாம். இந்த காலத்தில் இப்படி எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. ஏற்கெனவே பெண்ணையோ அல்லது பையனையோ பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான வரன் அமையவில்லையே என்ற மனஉளைச்சலில் இருப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நாம் கேட்கும் இந்த கேள்வி அவர்களின் மனதில் கூர்வேலைப் பாய்ச்சுவதுபோல அமையும் என்பதை நாம் உணரவேண்டும்.
திருமணமாகி சில மாதங்கள் கழிந்ததும் பெண்ணின் பெற்றோரிடமோ அல்லது பிள்ளையின் பெற்றோரிடமோ “என்ன வீட்ல ஏதாவது விசேஷம் இருக்கா?” என்று கேட்கிறார்கள். அக்கம்பக்கதில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பது கூட இல்லை. இது சம்பந்தப் பட்டவர்களின் மனதை பாதிப்புக்குள்ளாக்கும் மோசமான ஒரு கேள்வி என்பதை இந்த சமயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்கக் கூடாத கேள்விகளில் இந்த கேள்வி முதலிடம் பெறுகிறது. இது கேட்கக் கூடாத கேள்வியல்ல. கேட்கவே கூடாத ஒரு கேள்வி. இந்த கேள்வி சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தும். கண்ணீரை வரவழைக்கும். நமக்கு இதில் என்ன அக்கறை இருக்கிறது? அவசரம் இருக்கிறது?இந்த கேள்வியை எக்காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் கேட்டு விடாதீர்கள்.
பட்டியலில் இன்னும் சில கேள்விகள் உள்ளன. ஒரு பெண்ணிடம் உன் வயது என்ன என்று கேட்கக் கூடாது. ஒரு பையனிடம் உன் சம்பளம் என்ன என்று கேட்கக் கூடாது. யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற கேள்விகள் கேட்பதைத் தவிர்த்து விடுங்கள்.