நம்முடைய வாழ்க்கையில் நிறைய நேரம் முடிவெடுப்பதற்கு செலவழித்துக் கொண்டிருப்போம். எந்த முடிவெடுத்தால் லாபம் கிடைக்கும், எந்த முடிவெடுத்தால் ஜெயிக்க முடியும் என்று முடிவெடுக்கவே அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் கூட கை நழுவிப் போகக்கூடிய நிலை ஏற்படலாம். இதை சரியாக புரிந்துக் கொள்ள இந்த கதையை படியுங்கள்.
ஒரு காட்டில் சிறுத்தை வாழ்ந்து வந்தது. ஒருநாள் அதுக்கு உணவே கிடைக்காமல் களைப்பிலும், பசியிலும் வாடிக்கொண்டே உணவைத் தேடிக்கொண்டிருந்தது.
அப்போது தூரத்தில் கருப்பு மான் ஒன்றையும், புள்ளிமான் ஒன்றையும் பார்க்கிறது. இதை பார்த்த சிறுத்தைக்கு எதை துரத்துவது என்று முடிவெடுக்க முடியவில்லை. இதேசமயம், சிறுத்தையை பார்த்த மான்கள் அதிச்சியடைந்து ஒன்று வலப்பக்கமாகவும், இன்னொன்று இடப்பக்கமாகவும் ஓடத்தொடக்குகிறது.
இப்போது சிறுத்தைக்கு எதை துரத்துவது என்றே தெரியவில்லை. கொஞ்சம் யோசித்துவிட்டு கருப்பு மானின் இறைச்சி சுவையாக இருக்கும் என்று எண்ணி கருப்பு மானை துரத்தியது. சிறுத்தை அதிக நேரம் யோசித்ததால் கருப்புமான் ரொம்ப தூரம் ஓடிவிட்டது. இப்போது சிறுத்தை மிகவும் களைத்துப் போய்விட்டது.
பசி வேறு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது புள்ளி மானையே துரத்துவோம் என்று சிறுத்தை திரும்பி பார்க்க, புள்ளி மான் எப்போதோ தப்பித்து ஓடிவிட்டது தெரிந்தது. இரண்டு மான்கள் கிடைத்துமே, முடிவெடுக்க சிறுத்தை சற்று தாமதப்படுத்தியதால் இரண்டையுமே இழந்து பசியில் வாடியது.
இந்த கதையில் வரும் சிறுத்தையைப்போல நாம் எத்தனை பேர் இருக்கிறோம். நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு சரியான நேரத்தில், சரியான முடிவெடுக்க தெரியாமல் கிடைத்த வாய்ப்புகளை இழந்துவிட்டு நிற்கிறோம். எப்போதுமே முடிவெடுக்கும் போது ஒருமுடிவில் நிலையாக இருக்க வேண்டும்.
இதுவா? அதுவா? என்று யோசித்து நேரத்தை வீணாக்கினால், நமக்கு கிடைத்த வாய்ப்புகள் காணாமல் போய்விடும். எனவே, நம் வாழ்க்கையில் Decision making என்பது மிகவும் முக்கியம் என்பதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் நம்முடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.