வேலை, குடும்பம், ஆரோக்கியம், தனி மனிதக்குறிக்கோள் இவை அனைத்தையும் நமது தினசரி வாழ்க்கையில் பேலன்ஸ் செய்து நடப்பது சற்று கடினமான காரியம்தான். 8+8+8 முறையைப் பின்பற்றினால், ஒருவரால் வெற்றி அடைவது மட்டுமல்ல மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் 8 மணி நேரம் அலுவலக வேலைக்கும், இரண்டாவது 8 மணி நேரம் பொழுது போக்கவும், ஒருவரின் தனிப்பட்ட வெற்றிக்கும் வளர்ச்சிக்கும், மூன்றாவது 8 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கும் என இருக்க வேண்டும்.
முதல் 8 மணி நேரம்;
அலுவலகப் பணிகளை 8 மணி நேரத்திற்குள் சரியாக திட்டமிட்டு முடிக்க வேண்டும். சில சமயம் அதிக வேலைப்பளுவினால் அவதிப்படும்போது மனதையும் உடலையும் அதற்கு தயார் செய்து கொண்டு முழு மனதுடன் வேலையில் ஒன்றி கவனத்துடன் செயல்படும்போது அன்றைய வேலையை அன்றே முடிக்க முடியும். பணிகளுக்கிடையே தேவையில்லாத கவன சிதறல்களை தவிர்க்கவும். அலைபேசியின் நோட்டிபிகேஷனை அணைத்து வைக்கவும். கணினியில் வேலை செய்யும் போது வேலையில் மட்டும் கவனம் வைத்து எக்ஸ்ட்ரா பிரவுசர் டேப்களை எல்லாம் க்ளோஸ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் வேலையை தொடரலாம்.
இரண்டாவது 8 மணி நேரம்;
தனக்கான நேரம் என காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் ஐந்தாறு மணி நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளலாம். காலையில் உடற்பயிற்சி செய்வது, யோகா தியானம் போன்ற செயல்களால் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம். மாலை நேரத்தில் தனக்கு மிகப் பிடித்த வேலைகளை சிறிது நேரம், செய்யலாம். பாடல் கேட்பது படம் வரைவது, பெயிண்டிங் செய்வது, சிறிது நேரம் டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது, ஆடியோ புக் கேட்பது, போன்றவற்றை ஒரு மணி நேரம் செய்யலாம். நான்கு மணி நேரத்தை தன் தனிப்பட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுதல், தொழில் முன்னேற்றத்திற்கான யோசனைகள், புதிய விஷ்யங்களைக் கற்றுக் கொள்தல், என்று செலவிட வேண்டும்.
மூன்றாவது 8 மணி நேரம்
எட்டு மணி நேர உறக்கம் ஒருவருடைய உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. உறங்குவதற்கு முன்பு லேசான குளியல் அல்லது சிறிய நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். தூங்கும் முன்பு அமைதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு புத்தகம் படிப்பது, சிறிய அளவில் யோகா பிராக்டிஸ் செய்வது, இயற்கையில் சிறிது நேரம் செலவழிப்பது என்று இருக்கலாம். எலக்ட்ரானிக் சாதனங்களை படுக்கை அறையில் இருந்து விலக்கி வைப்பது அவசியம்.
8+8+8 முறையை பின்பற்றுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?
மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும். நேர்மறை எண்ணங்கள் எப்போதும் இருக்கும். பிறரிடத்தில் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தரும். மனம் அமைதியாக இருக்கும்போது தனிமனித வளர்ச்சிக்கு தேவையானவற்றை திட்டமிட உதவும். செய்யும் வேலைகள் கவனம் செலுத்த உதவும். திடீரென வேலைப்பளு கூடினால் அதை சமாளிக்கும் திறனையும் பக்குவத்தையும் அளிக்கும். கடினமான காலகட்டங்களில் இருந்து எளிதாக மீண்டு வர வழி வகுக்கும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்கள் இருந்தால், அவற்றை நோக்கிப் பயணப்பட வைக்கும்.