motivation image Image credit - pixabay.com
Motivation

வாழ்வில் உயர வைக்கும் உயர்ந்த பண்பு எது தெரியுமா?

இந்திராணி தங்கவேல்

பூமியில் தோன்றி  அருஞ்சாதனைகள் செய்த பலரின் பெயர்கள் ஆண்டாண்டு காலமாக நிலைத்திருப்பதற்கான காரணம்  என்னவென்று பார்த்தால் பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி என்று அவர்கள் வாழ்ந்து காட்டிய விதம்தான். 

அரிச்சந்திரனின் அழியா புகழுக்கு காரணம் சத்தியம் தவறாமையே. நாடு நகரம் அத்தனையும் இழந்தும் சத்தியம் தவறாமல், வகுத்த கொள்கையில் தெளிவாக, செயலில் உறுதியாக வாழ்ந்த காரணத்தினால்தான் இன்று வரை அவர் புகழ் நிலைத்து நிற்கிறது. இதைப் பின்பற்றியவர்தான் காந்தி. அன்பு, அகிம்சை, சத்தியம் என்றால் நாம் அனைவரும் நினைவுக்கூர்வது காந்தியை தான். இன்னும்  சுருங்கச் சொன்னால் புத்தர், காந்தி, இயேசு பிறந்தது பூமியில் எதற்காக என்றால்,  அவர்கள்  நமக்கு இந்த நற்செயல்களை போதித்து விட்டுச் செல்வதற்காகத்தான் என்றால் மிகையாகாது. 

‘ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’ என்கிறார் திருவள்ளுவர். கீழான செயலை செய்து பழி சொல்லுக்கு ஆளாகாதே என்பதை உறுதியாக சொல்லியிருப்பதை காணலாம். 

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்கிறார் பாரதி. சாதி இரண்டொழிய வேறில்லை என்கிறது   நீதி நூல். இதையெல்லாம் படித்துவிட்டு அப்படியே விட்டு விடுவதற்காக சொல்லப்பட்டவை அல்ல. செயலில் செய்து காட்ட வேண்டும்  என்பதை வலியுறுத்தவே புகட்டப்பட்ட பாடம் இது. இதைப் புரிந்து கொண்டவர் விவேகானந்தர். 

ஒரு முறை விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது பலரும் கருப்பினத்தவர் என்றே நினைத்தனர். பல ஓட்டல்களில் உணவு விடுதிகளில் உணவு தர மறுத்தனர். பல இடங்களில் அவரை அவமதித்தனர். எனவே இது பற்றி சீடர்கள் சுவாமிஜி நீங்கள் நீக்ரோ அல்ல என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கலாமே என்று கேட்டனர். அவர் உடனே "ஒருவரை மட்டம் தட்டி உயர்வதா?" இதற்காக நான் இப்பூமிக்கு வரவில்லை என்றார் விவேகானந்தர்.  இப்படிப்பட்ட அறச்செயல்களால்தான்  இவர்களின் புகழ் என்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 

நம் குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ மற்ற  குழந்தைகளோடு விளையாடும் பொழுதும், படிக்கும்போதும் விளையாட்டுப் பொருள்களை கொடுக்கவில்லை என்றாலும், தன்னைவிட அதிகமாக மார்க் எடுத்துவிட்டாலும், அவர்கள் மீது கோபம் கொண்டு, அந்தக் குழந்தைகளைப் பற்றி குறையாகவோ, மட்டம் தட்டியோ ஏதாவது பேசினால், அவர்களை உரிய முறையில் கண்டித்து அது போன்ற பேச்சுகளை பேசவிடாமல் தடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பிறரை மட்டம் தட்டி பேசாதபடி நல்ல செயல்களை போதிப்போம்! 

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT