எதிலும் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு இலக்குதான் முக்கியம். அந்த இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்றால் செயல்திறனில் முனைந்து செயல்பட கூடியதாக இருக்க வேண்டும். நாம் செய்யும் செயலை கனகச்சிதமாக நேர்த்தியுடன் செய்யும்பொழுது அதில் நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அந்த திருப்தியே பல்வேறு உயர்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
என் தோழி ஒருவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு கைத்தொழிலை செய்து கொண்டே டி வி பார்ப்பார். ஒருமுறை வயர் கூடை செய்து கொண்டே இருந்தபொழுது பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணி அதை கவனித்து, அவர் செய்த சில கூடைகளை எடுத்துப் பார்த்து நவராத்திரிக்கு மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு எனக்கு 21 கூடைகள் வேண்டும். செய்து தர முடியுமா? என்று கேட்டிருக்கிறார். என் தோழிக்கு சந்தோஷம் தாளவில்லை. கடகடவென்று 21 கூடைகளையும் அழகாக செய்து கொடுத்துவிட்டார்.
அது போதாது என்று அவர் குடியிருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ள பல்வேறு பெண்மணிகள் அவரின் செயல் திறன் நேர்த்தியை பார்த்துவிட்டு, அவரிடம் ஆர்டர் கொடுத்து இப்பொழுது பல்வேறு விதமான வயர் கூடையுடன் சேர்த்து, மற்ற பொம்மை செய்வது போன்ற அலங்கார பொருட்களையும் செய்து தரச்சொல்லி கேட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு மனநிறைவுடன் மற்றவர்களுக்கும் வாங்கி கொடுக்கிறார்கள்.
மற்றும் சிலர் இந்த நவராத்திரிக்கு மற்றவர்களுக்கு தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதற்கு அதை அழகாக வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே" என்பதற்கு இணங்க என் தோழி விற்பனைக்காக ஆசைப்பட்டது இல்லை. ஓய்வு நேரத்தை உபயோகமாக கழிக்கலாமே என்றுதான் பல வருடங்களாக இப்படி பல்வேறு விதமான கலைத் தொழில்களையும் செய்து வருகிறார். அது இப்பொழுது அவருக்கு நல்ல ஊதியத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அவருக்கு இதில் இலக்கு ஒன்றுதான். ஓய்வு நேரத்தை நன்றாக செலவழிக்க வேண்டும் என்பது. அவரின் செயல்திறனின் நேர்த்திதான் இந்த இலக்கை நோக்கி வெற்றி அடைய வைத்திருக்கிறது.
யார் எதில் வெற்றிபெற வேண்டுமானாலும் இலக்கை தீர்மானித்துவிட்டால், அதற்குரிய செயல் திறனில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த வெற்றியை அடைய முடியும்.
வெற்றிக்கு
வித்திடுவது இலக்கே
இலக்குக்கு வித்திடுவது
செயல்திறன் நேர்த்தியே!