பொதுவாக யாரையும் குறை சொல்லாமல் இருப்பதுதான் நேர்மறை எண்ணம். அதேபோல் சிலர் பிறரைப் பற்றி குறை கூற ஆரம்பித்தால் அந்த இடத்தை விட்டு அகன்று விடுவதை காணலாம் இதைத்தான் நல்லெண்ணம் என்று கூறுவது.
ஹஸரத் ஈஷா அவர்கள் தம் சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சீடர்களைப் பார்த்து, அவர் உங்கள் சகோதரன் ஒருவன் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் ஆடை காற்றில் விலகிக் கிடக்கிறது என்றால் அதைப் பார்த்து நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.
அவரின் விலகிய ஆடையை நாங்கள் ஒழுங்கு படுத்துவோம் என்று எல்லோரும் ஒரே குரலில் உரத்துச் சொன்னார்கள்.
மகிழ்ச்சி அடைந்த ஹசரத் ஈசா அவர்கள் "உங்களைப் போல உலக மக்கள் இல்லையே. பிறரிடம் குறை கண்டால் அதை மறைக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணுவது இல்லையே. அதை ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்கிறார்களே. பிறகு குறைகளைப் பற்றி சிரித்துபேசி அவர்களை இழிவு படுத்துகிறார்களே" என்றார்.
குறை கண்டால் ஒன்றும் பேசாதே. நிறை கண்டால் போற்று என்கிறது இலக்கியம்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி எப்பொழுதும் சமைத்து யாருக்காவது பிறர் ஒருவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்ட பிறகு மீந்ததைதான் சாப்பிடுவார். ஒருமுறை அவர் அப்படி சமைத்து வைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் உணவே வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எங்களுக்கு சற்று ஆச்சரியம்.
அவர் சாப்பிட்டு முடித்து மற்றவர்களுக்கு பரிமாற ஆரம்பிக்கும் பொழுது அவரின் பண்பை தினசரி கவனித்து வந்த ஒரு பெண்மணி ஆச்சரியப்பட்டு ஏன் முன்பாக சாப்பிட்டுவிட்டு பரிமாறுகிறாய். உன் பண்பு அது இல்லையே !என்று வினவினார். அதற்கு அந்தப் பெண்மணி தந்த பதில், பக்கத்து வீட்டாரிடமிருந்து அவர்கள் செய்த சாப்பாடு வந்தது. காலையில் அதை யாரும் விரும்பி சாப்பிடவில்லை. அது கொஞ்சம் தீய்ந்து போய்விட்டதால் யாரும் அதை தொடவில்லை. அந்தப் பெண்மணி தீய்ந்ததை கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்து கொடுக்கவில்லை.
சமைக்கும்போது தவறுவது இயல்புதானே! அதில் நமக்கு கொடுத்ததை ஏன் வீணாக்க வேண்டும். இன்னும் சற்று நேரம் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். அதனால்தான் நானே முன்பாக சாப்பிட்டு விட்டேன். அவர் கைப்பட சமைத்ததும் வீணாகவில்லை.
மற்றவர்களுக்கு பரிமாறும் நேரமும் சரியான நேரம்தான். ஆதலால்தான் அப்படி நடந்து கொண்டேன் என்றார்.
முன்பை விட அவர் மீது அனைவருக்கும் பரிவும், பாசமும், பெருமையும் அதிகமாகத்தான் ஏற்பட்டதே தவிர, அவரை குறை கூற வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் ஏற்படவில்லை. அவர் சாப்பிட்ட பொருளையும் குறையாக யாரும் மதிப்பிடவில்லை. இதுதான் வாழ்வியல் உண்மை. இப்படி குறைகளை நிறைவாக்கும் தன்மையைதான் நாம் புரிந்து நடக்க வேண்டும்.
அப்பொழுது குறையொன்றுமில்லை என்று ஆகிவிடும் அல்லவா?