நீங்கள் என்றைக்காவது, நம்முடைய வாழ்க்கை மட்டும் ஏன் இப்படியிருக்கிறது? நாம் அப்படி பிறந்திருந்தால் நன்றாக இருந்திருப்போமோ? அல்லது இப்படி இருந்திருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்குமோ? என்று நினைத்து வருத்தப்பட்டுள்ளீர்களா? அப்போ இந்தக்கதை உங்களுக்கு தான். முழுமையாக படியுங்கள்.
ஒரு காகத்திற்கு தான் மிகவும் கருப்பாக இருப்பதாக வருத்தம் இருந்தது. அதனால், மக்கள் யாருமே அதை மதிப்பதில்லை, யாருக்கும் அதை பிடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. அந்த காகம் சோகத்துடன் ஒரு கொக்கை சந்தித்து, ‘நானும் உன்னைப் போல வெள்ளையாக பிறந்திருக்கலாம்’ என்று கூறியது. இதைக்கேட்ட கொக்கோ, ‘நானும் அப்படிதான் நினைத்தேன். ஒரு கிளியை பார்க்கும் வரை. கிளி எவ்வளவு அழகாகவும், பல வண்ணங்களிலும், அழகிய மூக்குடனும் இருக்கும் தெரியுமா? என்று கொக்கு சொன்னதாம்.
இதை கேட்ட காகம் அந்த கிளியை தேடிச் சென்றது. ‘நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? நானும் உன்னைப் போல பிறந்திருக்கலாம்’ என்று காகம் கிளியிடம் கூறியதாம். இதைக் கேட்ட கிளி, நானும் அப்படி தான் நினைத்திருந்தேன். ஒரு மயிலை பார்க்கும் வரையில். ‘கண்ணைக்கவரும் அழகைக் கொண்ட மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடும்போது பார்க்க எவ்வளவு அற்புதமாக இருக்கும் தெரியுமா?’ என்று கிளி கூறியதாம்.
இதைக் கேட்ட காகம் ஒரு ஷூவிற்கு சென்று அங்கிருக்கும் கூண்டில் இருந்த மயிலிடம், ‘உன் அழகை பார்க்க இத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்கள். எனக்கு தெரிந்து நீ தான் இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாய்’ என்று கூறியதாம்.
இதைக்கேட்ட மயில், 'நான் இவ்வளவு அழகாக இருக்கப்போய்தான் இந்த சிறைக்குள்ளே இருக்கிறேன். இதுவே நானும் காகமாக பிறந்திருந்தால், என்னை யாருமே கண்டுக்கொள்ளாமல் இருந்திருப்பார்கள். நானும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வானத்தில் பறந்திருக்கலாம்' என்று மயில் கூறியதாம்.
நாமும் இப்படிதான், இவரைப்போல இருந்திருக்கலாம், அவரைப்போல இருந்திருக்கலாம் என்று அடுத்தவர்களின் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். ஆனால், உண்மையிலேயே இந்த உலகில் எல்லோருக்குமே பிரச்சனை என்பது இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கிறது அவ்வளவுதான். எனவே, நமக்கு கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதே சிறந்ததாகும். என்ன நான் சொல்வது. சரி தானே? நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே!