எந்த ஒரு இடத்திலும் நம்மளுடைய திறமையும் முயற்சியும் நிச்சயமாக வெற்றிபெறும். ஆனால், அதற்காக நாம் செய்ய வேண்டியது ஒரே ஒரு காரியம் மிக சாமர்த்தியமாக கை நகர்த்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து அதேபோல் எதிரில் இருப்பவர்களுக்கு கோபம் வராதவாறு செய்தாலே போதும் அந்த இடத்தில் நம் மதிப்பு உயரும்.
அதிலும் சிலரிடம் இருக்கும் சாமர்த்தியமான பேச்சு நம்மை யோசிக்க வைக்கும். எப்படி இவ்வளவு சுலபமாக வெற்றி பெற்றார்கள் என்று நம்மளை ஆச்சரியப்படுத்தும். அப்படி ஒரு இளைஞனின் கதைதான் இப்ப பதிவில்.
முதுகலைப்பட்டம் பெற்ற ஒரு இளைஞன் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு அலுவலகத்தின் வெளியில் ஒரு அறிவிப்புப் பலகையில் வேலைவாய்ப்புப் பற்றி எழுதி வைத்திருந்தார்கள். அதாவது "இந்த அலுவலகத்தில் ஒரு இளநிலை அலுவலர் பணி காலியாக உள்ளது. முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்த இளைஞன் அந்த பலகையையே தூக்கிக்கொண்டு அந்த அலுவலக மேலாளரைச் சந்தித்தான். முதுகலை முடித்த தனக்கு வேலை வேண்டி விண்ணப்பம் தந்தான்.
அப்போது அந்த மேலாளர் "விண்ணப்பம் தர வந்த நீ வெளியில் நாங்கள் வைத்திருந்த அறிவிப்புப் பலகையை ஏன் இங்கே எடுத்துக் கொண்டு வந்தாய்?" என்று கேட்டார்.
இளைஞன் அமைதியாக "ஐயா, அதுதான் அந்த பணிக்கு நான் வந்து விட்டேனே! இனி அது அங்கிருக்க வேண்டாம் என்று நினைத்தேன்" என்று பதில் சொன்னதோடு அதற்கான தகுதியையும் நிரூபித்தான். வேலையையும் பெற்றுக் கொண்டான்.
"இப்படியும் ஜெயிக்கலாம்" என்பதற்கு இந்த இளைஞனைப் போன்றவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளலாம். அடடா! என்று வியக்க வைக்கும் அவனது முயற்சியும், திறமையும் அபாரமாகவே தென்படுகிறது.
இந்த இளைஞனை போல் நீங்களும் சாமர்த்தியமாக நிதானமாக யோசித்து ஒவ்வொரு இடத்திலும் செயல்பட ஆரம்பித்தார்கள் என்றால் உங்கள் மதிப்பு மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையும் உயரும் இந்த இரண்டும் உயர்ந்தாலே போதுமே வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாமே சக்சஸ்தான்.