motivation article Image credit - pixabay
Motivation

தோல்வியே ஏற்பட்டாலும் வெற்றியை நினையுங்கள். நிச்சயம் வெற்றியைக் காண்பீர்கள்!

இந்திரா கோபாலன்

நீங்கள் ஒரு முயற்சியில் தோல்வியை சந்தித்தால்  இடிந்து போகாதீர்கள். அடுத்தமுறை நிச்சயம் வெற்றி என்று எண்ணி செயல்படுங்கள். தோல்வி நம் ரோசத்தைக் கிளப்பி விடவேண்டும். நம் தலையில் அடித்து நம்மை எழுந்து நிற்கச் செய்ய வேண்டும்.

பெண்கள் எல்லாம் அரசியலில் இறங்காத காலம் அது. 60ஆண்டுகளுக்குமுன் பிரபல நடிகை கே.பி.சுந்தராம்பாள் காங்கிரஸ் கொடியைக்கையில்  பிடித்துக் கொண்டு தேசபக்தி பாடல்களைப் பாடி வெள்ளைக்கார அரசுக்கு எதிராக பொதுமக்களை எழுப்பினார். சிறையில் வெள்ளைக்காரர்களால்.  அடைக்கப்பட்டார்.  சிறையிலிருந்து வெளிவந்த அவர் முன்னிலும் ஆவேசமாகப் பாடினார்.

தோல்வி கண்டவன்,  தோல்வியை சமாளித்தவன் தோல்வியே உன்னால் என்னை என்ன செய்யமுடியும்  என்கிறான். தோல்வி வந்தால் கலங்காதீர்கள். வெற்றி பெற தோல்விகளை  கடந்துதான் செல்ல வேண்டும். சிலருக்கு முதல் வெற்றி ஒரு அசாதாரண நம்பிக்கையை ஏற்படுத்திவிடுகிறது. எடுத்தெல்லாம் வெற்றியடையும்  என்ற போலி நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆணவத்தை வளர்த்து விடுகிறது. அடக்கம் கவனம் நிதானம் இவற்றையெல்லாம் தோல்விதான் தருகிறது. வெற்றியில் நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை. "வெற்றி சரியாகக் கண்காணிக்கப்படாவிட்டால் அங்கே வீழ்ச்சியின் விதை விதைக்கப்படும்" என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.

நீங்கள் வேலைக்கு முயற்சிக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் வேலை இல்லை என்றே பதில் கிடைக்கிறது. தொழில் தொடங்குகிறீர்கள். ஆனால் உற்பத்தி செய்ய முடியவில்லை. அந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்?

ஒரு முறை நண்பரின் தோட்டத்தைப் பார்க்கப்போனார்  தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி. நண்பர் அவரிடம் "எல்லா மரங்களும் காய்க்கின்றன. ஏனோ இந்த ஒரு மரம் மட்டும் காய்ப்பதில்லை. நான் வெட்டி விடப் போகிறேன் என்றார். மறுநாள் காலை தத்துவஞானி அந்த மரத்தின் அருகே நின்று "நீ அழகான மரம் நல்ல வயது. பூக்க வேண்டாமா. காய்க்க வேண்டாமா காய்த்துக் கனியாகு." என்று பேசி அன்புடன் தடவிக் கொடுத்தார். அடுத்த ஆண்டு அந்த மரம் அமோகமாய்க் காய்த்தது.

தோல்வி வரும். உண்மைதான். ஆனால் அதை அன்புடன் அணுகுங்கள். பேசுங்கள். வெற்றி வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். உறவாடுங்கள். இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல. நம் மனோபாவத்தை மாற்றிக் கொள்ளும்போது  இப்பிரபஞ்ச இயக்கத்தின் வெற்றி லயத்தில் வெற்றிப் பாதையில் ஐக்கியமாகிறோம். அது நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. தோல்வியை வெற்றியாக மாற்றுவது மனோபாவம்தான்.

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி  என்று ஆண்டான் பாடினாள். தன் மனக்கண் முன் அந்த நிகழ்ச்சியை அனுபவிக்கிறாள். ஆண்டவனுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டாள் ஆண்டாள். ஆண்டாள் பாடல்களை படித்தோமானால் ஆண்டாள் கண்ட கனவெல்லாம்  கற்பனை எல்லாம் முன்னேற்றமாக,  வெற்றிக் கனவுகளாக, நினைத்ததை அடையும் கனவுகளாக இருப்பதைக் காண்பீர்கள். உள்ளுவதெல்லாம் உயர்உள்ளல்  மற்றது தள்ளியும் தள்ளாமையுடைத்து என்றார் வள்ளுவர். தோல்வியே ஏற்பட்டாலும் வெற்றியை நினையுங்கள். நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT