நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக விரும்பும் ஒரே ஒரு விஷயம் மகிழ்ச்சி. மகிழ்ச்சியான மனநிலையில் வாழத் தெரிந்தவனுக்கு ஆயுள் அதிகம். மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி நடைபெறும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியானது எப்போதும் நிலைத்திருப்பதில்லை. இதேபோல துக்கமும் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. மனிதர்களின் வாழ்க்கையில் இரண்டுமே மாற்றத்திற்குரிய செயல்களாகும். நம்முடைய பிரச்னை என்னவென்றால் நாம் சாதாரண விஷயத்திற்குக் கூட கவலைப்படுகிறோம். இந்த கவலை நமது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு கவலைக்குரியதாக மாற்றி விடுகிறது.
மகிழ்ச்சியான விஷயம் நடந்தால் துள்ளிக் குதிக்கிறோம். இதற்குக் காரணம் என்ன? மகிழ்சியான செய்தியைக் கேட்டதும் நமது மூளையானது ஒருவித திரவத்தைச் சுரந்து அதை உடனடியாக இரத்தத்தில் கலந்து நமது உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இதனால் நமது உடல் புத்துணர்வு பெற்று துள்ளிக் குதிக்கிறது. இதே சமயம் துயரமான விஷயத்தைக் கேள்விப்பட்டதும் நமது மனம் மற்றும் உடலானது உடனடியாக சோர்ந்து போகிறது. துயரமான விஷயத்தை உணர்ந்ததும் நமது மூளையானது வேறு விதமான ஒரு திரவத்தைச் சுரந்து அதை உடனடியாக இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் அனுப்புகிறது.
நம்மில் பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரிவதில்லை. இதை நீங்கள் உங்களில் இருந்து தொடங்கலாம். நீங்கள் படுக்கச் செல்லும் முன்னால் இனி நான் எக்காரணத்தைக் கொண்டும் கவலைப்படப் போவதில்லை. இனி நான் ஒரு மகிழ்ச்சிகரமான மனிதன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறெதுவுமில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்து உறங்கும் வழக்கத்தை கடைபிடியுங்கள். இதேபோல மறுநாள் காலை எழுந்ததும் நான் மகிழ்ச்சிகரமான மனிதன். இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொல்லிவிட்டு எழுந்து உங்கள் வாழ்க்கையைத் தொடங்குங்கள்.
ஒரு சமயம் மன்னர் ஒருவர் தன் பாவங்களைத் தொலைக்க கங்கையில் நீராட விரும்பினார. அங்கே ஒரு துறவி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டார். வெறும் கோவணமே அணிந்த துறவி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்ததும் அந்த மன்னருக்கு உண்மையிலேயே ஆச்சரியம் ஏற்பட்டது. உடனே மன்னர் துறவியிடம் சென்றார்.
“துறவியே. என்னிடம் அதிகாரம் படைபலம் செல்வம் எல்லாம் உள்ளது. ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. தாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருப்பதைக் காண்கிறேன். தங்களின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”
“என் மனத்தில் ஆசை என்பதே இல்லை. அதனால் என்னிடம் செல்வம் இல்லை. அதனால் எனக்கு எதிரிகள் எவரும் இல்லை. எதிரிகள் எவரும் இல்லாததால் நான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்”
“அதுசரி. ஆனால் தங்களுக்கென ஒரு வீடு கூட இல்லையே”
மன்னரின் இந்த கேள்விக்கும் துறவி மகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.
“எனக்கு வீடு இல்லை என யார் சொன்னது. இதோ என் காலடியில் இருக்கும் உலகம்தான் என்னுடைய வீடு”
துறவியின் இந்த பதில் மன்னரின் மனத்தை வெகுவாக மாற்றியது.
உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்பது அவருக்கு புரிந்துவிட்டது. தன்னுடைய நாடு செல்வம் என அனைத்தையும் துறந்து துறவியானார். அதன் பின்னர் அவரும் எந்நேரமும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
ஒரே ஒருநாள் வாழும் பூக்களைப் பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக காட்சி அளிக்கிறது. அதைப் பார்க்கும் நமக்கும் ஒருவித மகிழ்ச்சி பிறக்கிறதல்லவா? பறவைகளைப் பாருங்கள். இங்கும் அங்கும் பறந்து பறந்து வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சிகரமாக கழிக்கிறதல்லவா? தனியாக அமர்ந்து யோசித்துப் பாருங்கள். நம்மாலும் நிச்சயம் மகிழ்ச்சியாக வாழ முடியும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப்படுவதை முதலில் விடுங்கள். இப்படிப் பழகிக் கொண்டால் பெரிய விஷயங்களையும் உங்களால் எளிதாக கையாள முடியும்.
மகிழ்ச்சிக்கும் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. எனவே முடிந்தவரை உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளப் பழகுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழப் பழகுங்கள். மகிழ்ச்சி உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும்.