இவ்வுலகிலுள்ள பெரும்பாலான நபர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை அவர்களது கட்டுப்பாட்டில் முழுமையாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலான தருணங்களில் அது அப்படி இருப்பதில்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியது படி வாழ வேண்டுமென்றால், முதலில் உங்களால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களில் மட்டும் உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள். மற்ற விஷயங்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது. இந்த பதிவில் நான் சொல்லப்போகும் ஆறு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் முடிந்தவரை உங்களது வாழ்க்கையின் பல தருணங்கள் உங்களது கண்ட்ரோலில் இருக்கும்.
1. அமைதியாக இருங்கள்: உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு நபரிடம் ஒரு கேள்வி கேட்கிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களுக்கு ஏற்ற பதிலை தரவில்லை எனில், அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் மறித்து நீங்கள் பேச வேண்டாம். அவர் தனது பதிலை முடிக்கும் வரை அமைதியாக இருங்கள். எனவே, நீங்கள் ஒரு நபருடன் பேசுகிறீர்கள் என்றால், அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதி காத்து அதன் பின்னர் உங்கள் கருத்துக்களை சொல்வது நல்லது. இப்படி செய்தால் எந்த தருணமாக இருந்தாலும் அதை உங்களால் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும்.
2. முக்கியத்துவத்தை தெரியப்படுத்துங்கள்: நீங்கள் உங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையில் உங்களுடன் இருப்பவர்களுக்கு உங்களின் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்துங்கள். அப்படி இருந்தால் மட்டுமே உங்களுக்கான விஷயங்களை அவர்கள் செய்து கொடுப்பார்கள். உதாரணத்திற்கு முன்பின் தெரியாத நபரிடமிருந்து உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், நேரடியாக அவர்களிடம் உதவி கேட்காமல், உங்களால் அவர்களுக்கு வேறு விதமாக என்ன செய்ய முடியும் என்பதைத் தெரியப்படுத்திவிட்டு உதவி கேட்டால், உங்களுக்கானதை அவர்கள் செய்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
3. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்: எந்த அளவுக்கு உங்கள் வாழ்வில் உங்களது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு எல்லா தருணங்களிலும் உங்களால் நிம்மதியாக இருக்க முடியும். எந்த அளவுக்கு மற்ற விஷயங்களை நீங்கள் கண்ட்ரோல் செய்ய நினைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களது வாழ்க்கை உங்களது கண்ட்ரோலில் இல்லாமல் போகும். எனவே எதையும் அதிகமாக எதிர்பார்க்காமல், உங்களது வேலையை சிறப்பாக செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
4. குணநல ஆய்வு: ஒருவர் எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ள, நீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிறரை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்து அவர்களின் உண்மையான குணநலத்தை அறிய முடியும். நல்ல உள்ளம் கொண்டவர்கள் எல்லா நபர்களையும் ஒரே மாதிரி நடத்துவார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரி பேசி பழகுவார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் இவ்வுலகில் எல்லா நபர்களுமே ஒரே மாதிரி மதிக்கத்தக்கவர்கள் என்று. எனவே பிறரது செயல்கள் சொல்லும் அவர்கள் யார் என்று.
5. கற்றுக்கொண்டதை சொல்லிக் கொடுங்கள்: நீங்கள் ஒரு விஷயத்தை வேகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால், அதை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் எப்படி சொல்லிக் கொடுப்பீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு படித்தால், வேகமாக கற்கலாம் என சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் எதில் தேர்ச்சி பெற விரும்புகிறீர்களோ அதை பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் மனநிலையுடன் கற்றுக் கொள்ளுங்கள்.
6. உடல்மொழி முக்கியம்: நீங்கள் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர் என்பது உங்கள் உடல் மொழியில் தெரியும். எனவே சிறப்பான உடல் மொழியை எல்லா தருணங்களிலும் வைத்திருங்கள். உங்கள் மன நிலைக்கும் உடல் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உங்கள் உடல் மொழியை வைத்தே நீங்கள் எத்தகைய மனநிலை கொண்டவர் என்பதைக் கணிக்க முடியும்.