motivation image pixabay.com
Motivation

வாழ்க்கையில் மேம்பட இந்த 9 விதிகளை கடைப்பிடியுங்கள்!

நான்சி மலர்

சில சமயங்களில் நமக்கு தோன்றும், இது போன்ற விஷயங்கள் நமக்கு முன்பே தெரிந்திருந்தால் நம் வாழ்க்கையில் ஒரு சிறிய மாறுதலாவது நிகழ்ந்திருக்குமே என்று நினைத்து வருத்தப் படுவதுண்டு. அவர்களுக்காகவே இந்த 9 விதிகள்.

எப்போதுமே நாம் உண்டு  நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடுவது, அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது என்று மூக்கை நுழைத்தால், முக்குடைந்து போக வேண்டிய நிலை வரலாம். உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பது நல்ல குணமாக இருந்தாலும், எல்லா சமயங்களிலும் அது நமக்கு சாதகமாக அமைவதில்லை.

எந்த விஷயம் கேள்விப்பட்டாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு, அதைப்பற்றி நம்முடைய கண்ணோட்டத்திலிருந்து ஒருமுறை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். அடுத்தவர்களுடைய கருத்து எப்போதும் நாம் எடுக்க போகும் முடிவை பாதிக்க கூடாது.

அடுத்தவர்களிடம் எல்லா விஷயங்களிலும் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்ளாமல் இருப்பது சிறந்ததாகும். அடுத்தவர்கள் நம்மை மிகவும் எளிதில் கணித்து விடுவதற்கு வாய்ப்பு வழங்கி விட்டால், நம்முடைய அடுத்த அடி என்ன என்பதை எளிதில் தெரிந்துகொள்வார்கள். எனவே நம்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எப்போதும் அடுத்தவர் மனதில் விதைத்து கொண்டேயிருக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், நன்றாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. அந்த முடிவை எடுப்பதற்கு முன் எத்தனை முறை வேண்டுமோ யோசித்து கொள்ளலாம். ஆனால் முடிவெடுத்து அதை செய்து முடித்த பின்பு வருந்தக்கூடாது.

அடுத்தவர்களை பார்த்து சூடுப்போட்டு கொள்வதை இந்த காலத்தில் நிறைய பேர் செய்கிறார்கள். அவங்க எப்படி வேணுமோ வாழ்ந்து விட்டு போகட்டும். நாம் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

நம்முடைய லட்சியத்தை அடைய போராடுவது என்பது வேறு, நம்மை மற்றவர்களிடம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று நினைத்து போராடுவது வேறு. அடுத்தவர்களிடம் வாழ்க்கை முழுவதும் நம்மை நிரூபித்து கொண்டிருக்க முடியாது. எனவே நம்முடைய லட்சியத்தை நோக்கி ஓடுவதே சிறந்ததாகும்.

அடுத்தவர்களுடன் தேவையில்லாத விவாதம் செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள், கேட்கவில்லையா? நீங்கள் சொல்வது தான் சரி என்று தலையை ஆட்டிவிட்டு நகருங்கள்.

எப்போதும் அமைதியான மனநிலையில் இருக்கும் போதே முடிவெடுக்க வேண்டும். சோகமாக இருக்கும் போது முடிவெடுப்பதும், மகிழ்ச்சியாக இருக்கும் போது சத்தியம் செய்வதும் தவறாகும். அது நமக்கு இக்கட்டான சூழ்நிலையை எதிர்க்காலத்தில் உருவாக்கி விடும்.

நமக்கு ஒரு விஷயம் வராது என்று கண்டிப்பாக தெரியும் போது அதை ஆரம்பத்திலேயே விட்டு விடுவது நல்லதாகும். அதை செய்கிறேன் என்று முயற்சித்து நேர விரயம் செய்வது தவறாகும்.

எனக்கு மிகவும் பிடித்த விதி, இப்போது சொல்லப்போவது தான். அதுதான் விதிகளை உடைப்பது. சாலை விதிகளை தவிர்த்து மற்ற எல்லா விதிகளையும் உடைப்பதில் தவறில்லை. உதாரணத்திற்கு நான் இங்கே 9 விதிகள் சொல்ல போவதாக குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இது பத்தாவது விதி. எப்போதுமே நம்மை ஒரு வட்டத்துக்குள் அடைப்பது போன்ற விதியை பின்பற்றி கொண்டிருப்பது நம்மை வளரவிடாது. அங்கே அந்த விதியை உடைப்பதில் தவறில்லை.

எல்லாவற்றையும் பின்பற்ற முடியாவிட்டாலும், உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றையாவது பின்பற்றி பாருங்களேன். கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றத்தையாவது  உணருவீர்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT