Angry Image Image credit - pixabay
Motivation

கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்!

ம.வசந்தி

"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்" என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

நாம் யாரிடம் கோபத்தை காட்டினால் பயந்து நடுங்குவார்களோ, அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் இருப்பதுதான் சிறந்தது.

நம் கோபம் செல்லாத - இடத்தில் அதைக் காட்டினாலும் காட்டாவிட்டாலும் மிகுந்த வேறுபாடு இல்லை. காரணம், நம் கோபம் செல்லாத இடத்தில் கோபத்தைக் காட்டினால் அதனால் நமக்குத்தான் இழப்பு ஏற்படும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். யார் தங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் அதிகக் கோபத்தைக் காட்டுகிறார்களோ அவர்கள் தனக்கு மேலே உள்ளவர்களிடம் அதிகமாகக் குழைபவர்களாக இருப்பார்கள்.

உடலை வில்லாக வளைத்து, சப்தநாடியையும் ஒடுக்கி, கைகட்டி, வாய்பொத்தி மேலதிகாரிகளிடம் நடப்பவர்தான் தன் கையாலாகாத்தனத்தைக் கீழுள்ளவர்களிடம் காட்டி. அவர்களுடைய தன்முனைப்பைத் தாழ்த்திக்கொள்வார்கள்.

அவர்கள் கோபத்தைக் காட்டுகின்ற விதம், வெவ்வேறு மாதிரியாக இருக்கும். பெரும்பாலும் அவர்கள் கோபம் உயிரற்ற பொருட்களின் மூலமாகத்தான் வெளிப்படும்.

கோப்பைத் தூக்கி எறிவார்கள். கதவை வேகமாகச் சாத்துவார்கள். நாற்காலியை எட்டி உதைப்பார்கள். பேப்பர் வெயிட்டைத் தூக்கி எறிவார்கள். கையில் கிடைக்கும் எதையாவது போட்டு உடைப்பார்கள். அப்படியெல்லாம் தன் கோபத்தை வெளிக்காட்ட வேண்டுமென்று விருப்பப்படுவார்கள்.

ரின்சாய் என்கின்ற துறவியைக்காண ஒருவன் வந்தான். வழியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கவேண்டும். அவன் வேகமாகத் தன்னுடைய காலணியைக் கழற்றிச் சுவற்றில் எறிந்துவிட்டு, ரின்சாய்  முன்வந்து மண்டியிட்டு வணக்கம் செலுத்தினான்.

அதற்கு ரின்சாய் "நான் ஒருக்காலும் உன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

"வரும்போது ஏன் நீ இந்தக் கதவைத் தள்ளிவிட்டு உன் காலணிகளை உதறி எறிந்தாய்?

முதலில் உன் காலணிகளிடமும், கதவிடமும் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டு வா; பின்னர் நான் உன்னை அனுமதிக்கிறேன்" என்று சொன்னார்.

வந்தவன், ஒரு மிகப்பெரிய துறவி இப்படிப் பேசுகிறாரே, பகுத்தறிவுக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு செயலைச் செய்ய வற்புறுத்துகிறாரே என்று நினைத்தான்.

'நான் எதற்கு என் காலணிகளிடமும், கதவிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். முதலில் அவற்றுக்கு உயிர் இருக்கிறதா? நான் மன்னிப்புக் கேட்டால் அவை புரிந்துகொள்ளத்தான் போகின்றனவா? உயிரற்ற  அவற்றிடம் மன்னிப்புக் கேட்பதால் என்ன பயன்?" எதிர்க்கேள்வி கேட்டான்.

அதற்கு ரின்சாய் "உண்மைதான் உயிரற்றவைதான். அவை ஜடப்பொருட்கள்தான் அவை. ஆனால் நீ உன் கோபத்தை அந்த ஜடப்பொருட்களிடம்தானே காண்பித்தாய்? அப்போது ஜடப்பொருட்களாக அவை உனக்குத் தெரியவில்லையா? நீ அவற்றிடம் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும்" என்றார். அவன் தன் தவறை உணர்ந்தான்.

கோபம் இருந்தால் மலர் கூட சருகாகிவிடும். கோபமே வராமல் பார்த்துக் கொள்கிற மனநிலை ஏற்பட்டால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புத்தர் அகப்படுவார்.

கீல்வாதம் - முடக்கு வாதம் (Arthritis – Rheumatoid Arthritis) என்ன வித்யாசம்? ஏன் ஏற்படுகிறது?

Menopause குறித்த முழு உண்மைகள் இதோ! 

சச்சரவுகளுக்கு தீர்வாகும் சமாதானப் போக்கின் முக்கியத்துவம்!

உணவியல் நிபுணர்கள் கூறிய உபயோகமான சமையல் குறிப்புகள்!

மழைக்காலத்தில் கொசுவத்தியால் ஏற்படும் தீமைகள்! 

SCROLL FOR NEXT