யார் மீதும் பற்றோ பாசோ வைக்காதே என்ற சித்தாந்தத்தால் நீங்கள் குழம்பிப்போவீர்கள். யாருக்கு என்ன நடந்தால் என்ன என்று அலட்சியத்துடன் அக்கறையில்லாமல் இரூப்பதை பற்றில்லாமல் இருப்பது என்று திரித்து உங்களையே ஏமாற்றிக் கொள்வீர்கள். பூமியுடன் பற்று கொண்டு மரம் தன் வேர்களை ஆழமாக செலுத்தும் போதுதான் அது ஆரோக்கியமாக வளர்கிறது. பல பட்சிகளுக்கு இருப்பிடம் தருகிறது. காய் கனிகளைத் தருகிறது. பூமியிலிருந்து அதை பிடுங்கி எறிந்தால் சிதைந்து போகிறது.
உங்களுடைய அடிப்படை குணம் பற்று வைப்பதாக இருந்தால், நீங்கள் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். துன்பத்தின்அடிப்படைக் காரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பற்று வைத்தால் துன்பம்தான் என்று சொல்லி விடுகிறார்கள். பற்று கொண்டால் எப்போது துன்பம் வருகிறது. உஙகள் குழந்தையை அழைத்து வரும் ரிக்ஷா கண்ணெதிரே கவிழ்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?. ஓடிப்போய் கீழே கிடக்கும் குழந்தைகளில் உங்கள் குழந்தையைத்தான் முதலில் அள்ளி எடுப்பீர்கள். குழந்தைகளின் மீது பற்று என்றால் எந்தக் குழந்தையையும் நீங்கள் எடுத்திருக்கலாம்.
அங்கே குழந்தையின் மீது பற்று இல்லை. உங்கள் குழந்தை என்று சொந்தம் கொண்டாடும் தன்மை, நான் எனது என்ற எண்ணங்கள் தான் முன் நிற்கிறது. ஒருவர் உங்கள் நண்பராக இருக்கும்போது பற்று கொள்கிறீர்கள். அவர் எதிரியாகும்போது காழ்ப்பு வருகிறது. எந்த உறவிலும் உங்களை விலக்கிவிட்டு மற்றவரை மட்டுமே முன்னிறுத்தி பெற்றுக்கொள்ள இயலவில்லை. உங்களை முன்னிறுத்திதான் பற்று கொள்கிறீர்கள். அப்படி குறுகிய வட்டத்துக்குள் உங்களை அடைத்துக் கொள்ளும்போது பற்று இருந்தாலும் பிரச்னைதான். இல்லாவிட்டாலும் பிரச்னைதான்.
விருப்பு வெறுப்புகள் என்று பார்வையை குறுக்கிக் கொள்வதால் எத்தனையோ அத்புதமான விஷயங்கள் நீங்கள் பற்று கொள்ளும் பட்டியலில் தவிர்க்கப் படுகின்றன. எல்லாவற்றிலிருந்தும் பற்றில்லாமல் விலகி தனியே போய் நிற்பது சுதந்திரமல்ல. வளர்ச்சியடைந்த. எல்லாவற்றையும் தனக்குள் ஏற்று விச்வரூபம் எடுத்துக் காட்டுவதுதான் உண்மையான வளர்ச்சி. காற்றும் வாசமும் ஒன்றுடன் ஒன்று முழுமையாக பற்று கொண்டு சேரும்போது ஒன்றிலிருந்து மற்றதை பிரித்து கவனிக்க முடியாது. நீங்கள் ஒருவர் மீது வைக்கும் பற்று அத்தகைய ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அப்புறம் இன்னொன்று என்ற அடையாளம் ஏது?
சேர்ந்திருக்கலாமா விலகியிருக்கலாமா என்ற கேள்விக்கு? அதன் மீது பற்று வைக்கலாமா என்ற கேள்வி ஏது? இந்த வாழ்க்கையில் இன்னொரு உயிரைக் தன் உயிர்போல் மதித்துப் சேர்த்துக்கொள்வதற்கு இணையான உன்னதம் வேறென்ன இருக்க முடியும். உங்களுடையது என்பதை விலக்கி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்சத்துடன் நீங்கள் முழுமையாக பற்று கொள்ளும்போது, உங்கள் வாழ்க்கையே முழுமையாகிவிடும்.