இன்றைய சூழலில் மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பற்பல புது வழிகளை எல்லாம் பயிற்சி செய்து மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரியாக மாறுவதற்கு முயற்சி செய்கிறோம். ஆனால், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் அன்பையும் பாசத்தையும் ஏனோ நம் மீது துளி அளவும் வைப்பதில்லை.
சுய-அன்பு என்பது தன்னைக் கவனித்துக்கொள்வதிலும் பாராட்டுவதிலும் அடங்கும். நம்மை நாம் எப்படி விரும்புவது என்று அறியாத நபர்களா நீங்கள்? உங்களை நீங்களே விரும்புவது எப்படி என்று இதில் பார்ப்போம்.
1. சுய இரக்கத்தைப் பழகுங்கள்
நம் எல்லோருக்கும் ஒரு பழக்கம் உண்டு. நம் உடன் பழகும் நண்பரோ, உறவினர்களோ ஏதாவது மனச்சோர்வு ஏற்பட்டுச் சோர்ந்து இருக்கும்பொழுது அவர்களை மனமாற்றுவதற்காக அவர்களிடம் கருணையோடும் பறிவோடும் இருப்போம். ஆனால், நமக்கு ஒரு சூழ்நிலை மாற்றத்தால் சோர்வு ஏற்பட்டால் அடுத்தவருக்குச் செய்த உபதேசத்தை நமக்குப் பயன்படுத்திப் பார்க்கமாட்டோம். உங்கள் பேரில் உங்களுக்கே கருணை வளர வேண்டுமெனில், கடினமான காலங்களில் நண்பருக்கு நீங்கள் வழங்கும் அதே அக்கறையுடனும் புரிதலுடனும் உங்களை நீங்களே நடத்துங்கள்.
2. எல்லைகளை அமைக்கவும்
உங்கள் சுயநலன் பாதிக்கப்படுவதற்கான முக்கியமான காரணம், வேண்டாம் என்று சொல்லும் இடங்களில் வேண்டாம் என்று சொல்வதைத் தவிர்ப்பது. உங்கள்
நல்வாழ்வைச் சமரசம் செய்யும் விஷயங்களுக்கு வேண்டாம் என்று சொல்லவும், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்களை உயர்த்தி ஆதரிக்கும் நபர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். எதிர் மறையிலிருந்து விலகி இருங்கள். சுய மதிப்பை வலுப்படுத்தவும் எதிர்மறை எண்ணங்களை எதிர்க்கவும் நேர்மறை உறுதிமொழிகளைப் பயன்படுத்துங்கள்.
3. சுய-கவனிப்பு
இன்று சமூக வலைத்தளங்களில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது, என்னென்ன தகவல்கள் புதிதாக வந்துள்ளன என்பதில் காட்டும் ஆர்வத்தைக் குறைத்து, நாம் அன்றாடம் செய்யும் செயல்களாகிய குளிப்பது, புத்தகம் படிப்பது, அல்லது நடைப்பயிற்சி செய்வது என, சுய பாதுகாப்பு சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
4. ஏற்றுக்கொள்ளுதல்
உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். யாரும் 100% சரியானவர் களாகவோ, கச்சிதமாகவோ இருக்கமுடியாது என்பதை உணர்ந்து, நீங்கள் யார், எத்தகையவர் என்பதை ஆராய்ந்து, அறிந்து அதை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக்கொள்ளுங்கள்.
5. சாதனைகளைக் கொண்டாடுங்கள்
வெற்றிகள் அடையும் முன்னே கொண்டாடும் பல மக்கள் இருக்க, வெற்றி அடைந்தாலும் பல சாதனைகளை நிகழ்த்தினாலும் அதனைக் கொண்டாடாத சில மக்களும் உள்ளனர். உங்களின் சுயமதிப்பு வளர நீங்கள் செய்த சாதனைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கவும். நம் வெற்றிகளை நாம் கொண்டாடவில்லை எனில், மற்றவர்கள் எப்படிக் கொண்டாடுவார்கள்? உடனே கொண்டாட்டம் என்றதும் திருவிழாக் கோலம் போல ஆயிரம் பேருக்கு அன்னதானம் இடுவது, அடுத்தவருக்கு ஏதாவது வாக்குறுதி கொடுப்பது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம். நீங்கள் அடையும் முன்னேற்றத்திற்குச் சிறு பரிசுகளை உங்களுக்கே நீங்களே கொடுத்துக் கொண்டாடுங்கள்.
6. உங்களை மன்னியுங்கள்
கடந்த கால தவறுகளை மறந்துவிட்டு உங்களை நீங்களே மன்னியுங்கள். தவறு செய்யாத மனிதன் என்று யாரும் இல்லை, தவறு செய்யாதவன் மனிதனே இல்லை. எல்லோரும் தவறு செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், தவறுகள்தான் வளர்ச்சிக்கான வாய்ப்புகள். தனிப்பட்ட வளர்ச்சியில் நேரத்தை முதலீடு செய்யுங்கள். இலக்குகளை அமைத்து அவற்றை நோக்கிச் செயல்படுங்கள். சாதனை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களே! இதை முதலில் மனதில்கொள்ளுங்கள் - சுய-அன்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும் இது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டது. உங்களுக்கான உத்திகளைக் கண்டறிந்து, அதை உங்கள் அன்றாட வாழ்க்கையில் இணைக்கவும்.