பேச்சு என்பது ஒரு கலை. பிறர் மனம் கவரும்படி பேசுவது ஒரு வரம் என்றே சொல்லலாம். மேடைப்பேச்சு மட்டுமல்லாமல் நாம் தினந்தோறும் சந்திக்கும் மனிதர்கள், பழகும் நபர்கள், அலுவலகம் மற்றும் வீட்டிலுள்ளவர்கள் என்று அனைவரிடமும் நன்றாகப் பேசுவது அவசியம். அதற்கு உதவும் உத்திகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆர்வமாக கேட்க வேண்டும்;
முதலில் பிறர் பேசுவதை பொறுமையாக ஆர்வமாக கேட்பது அவசியம். அவர்கள் பேசும் விஷயத்தை நன்றாக கிரகித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களுடைய குணாதிசயங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மக்கள் நன்றாக பேசுபவர்களை விட நன்றாக கேட்பவர்களைத்தான் விரும்புவார்கள். உற்றுக்கேட்பதன் மூலம் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பதிலளிக்க முடியும்.
சுருக்கமாக பேச வேண்டும்;
‘வள வள’ என்று இல்லாமல் உங்கள் பேச்சு சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். நீளமாக பேசும் போது அது சுவாரசியமற்றுப் போய்விடும். கேட்பவர்களுக்கு சலிப்பைத் தரும். பிறரின் நேரத்தை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சுருக்கமாகப் பேச வேண்டும்.
நேர்மறையான உடல் மொழி:
ஒருவர் பேச வருவதை பாதி அவரது உடல் மொழியே உணர்த்தி விடும். கண்களைப் பார்த்து பேசுவது, உறுதியான குரலில் பேசுவது, பிறர் பேசும் போது ஆர்வத்துடன் கவனிப்பது போன்றவை நல்ல மரியாதையை ஏற்படுத்தித் தரும்.
அனுதாபத்தை வெளிப்படுத்துதல்;
பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ளும் விதத்தில் எம்பதி எனப்படும் அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும். இது நல்ல ஒரு உறவை நட்பை ஏற்படுத்திக் தரும்.
சிறு சிறு கேள்விகள் கேட்பது:
உரையாடலில் நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் எதிரில் இருப்பவரிடம் சின்ன சின்ன கேள்விகள் கேட்டு அவர்களை சுவாரசியமாக உரையாடலில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
மனதார பாராட்டுதல்;
பிறருடைய தோற்றம் நற்செயல்கள் நல்ல எண்ணங்கள் போன்றவற்றை மனதார பாராட்டலாம். அவர்கள் மனம் மகிழ்வதோடு உங்கள் மீது மரியாதையும் கூடும்.
ஆளுக்கேற்றார் போல பேச வேண்டும்;
யாரிடம் பேசுகிறோமோ அவருக்கு ஏற்றார் போல நம் பேச்சு இருக்க வேண்டும். எதிரில் இருப்பவர் ஒரு சாதாரணர் என்றால் அவருக்கு ஏற்றார் போல எளிமையாக இருக்க வேண்டும். படித்தவர் அறிவாளி என்றால் அதற்கேற்றார் போல நாம் சொல்ல வரும் சிந்தனைகளும் வெளிப்படுத்தும் கருத்துக்களும் சிறந்தவைகளாக இருக்க வேண்டும்.
சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துதல்
மேடைப் பேச்சாளர், அல்லது ஒரு கம்பெனியின் குழுத் தலைவராக இருந்தால் தன்னுடைய திறமைகளை நன்றாக வளர்த்துக் கொண்டு காலத்திற்கு ஏற்றார் போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நல்ல பேச்சாளராக வலம் வர முடியும். பிறர் மனங்களையும் கவர முடியும்.