நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் விழிப்புணர்வு என்பது இல்லை என்றால் அனைத்தும் பட்டுப்போன மரம்போல் எவருக்கும் பயனின்றி போய்விடும் என்பதுதான் உண்மை.
ஒரு இளைஞன் கடும் உழைப்பாளி. தினம் தன் சிறிய தோட்டத்தில் புதிது புதிதான செடிகளை தேடித்தேடி நடுவதும் அதற்கு நீர் ஊற்றுவதிலும் அவனுக்கு விருப்பம். அவன் உழைப்பில் செழித்து வளர்ந்த செடிகள் சில நாட்களில் பாழ்பட்டு போனது. தொடர்ந்து இப்படியே சில நாட்கள் போனது. இளைஞனுக்கு தன் மீது வெறுப்பு வந்தது. தான் இவ்வளவு பாடுபட்டும் அதற்குரிய பலனை அடைய முடியவில்லை என்று மனம் நொந்தான்.
அப்போது அங்கு வந்த தோட்டக்காரர் "தம்பி உன் தோட்டத்தில் அருமையான செடிகளை வளர்க்கிறாய். சிறிய வயதில் உன் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் அதற்கு உண்டான பாதுகாப்பு நீ தரவில்லையே? ஆடுகள் சரியாக உன் தோட்டத்தில் வந்த மேய்ந்து விட்டு போய்விடுகிறது. காரணம் நீ விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதினால்தான். உன் தோட்டத்திற்கு இனியாவது பாதுகாப்பான வேலிகள் போட்டு கண்காணி" என்றார்.
அந்த இளைஞனுக்கு தன் தவறு புரிந்தது. தான் எவ்வளவு உழைத்தாலும் விழிப்புணர்வுடன் பணியாற்றவில்லை என்றால் அந்த செயல் வீண் என்று உணர்ந்தான். உடனடியாக தனது தோட்டத்திற்கு வேலியமைத்து ஆடுகள் புகாத வண்ணம் சில மாறுதல்கள் செய்தான். இரவு பகல் தனது தோட்டத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தான். நாட்கள் சென்றது. அவனது தோட்டத்தில் செழித்து வளர்ந்த செடிகள் மரங்களாக கனிகள் தரத் தொடங்கியது .அவன் பாடுபட்டதற்கான பலன் கிடைத்தது.
இந்த இளைஞனைப் போல் தான் நாமும் நமது கல்வி அறிவு பெருக்கி திறமைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ள தவறி அதன் முழு பலனை அடைய முடியாமல் தடுமாறுகிறோம். அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதில் தேர்ந்த விழிப்புணர்வுடன் இருந்தனர். ஆனால் அறிவியல் சாதனங்கள் பெருக்கத்தால் விழிப்புணர்வு ஒன்றில் மட்டும் அடங்கி மற்ற திறன்களை முடக்கி விடுகிறது.
சரி விழிப்புணர்வு பெற வழி ஏதேனும் உண்டா? நிச்சயம் உள்ளது. நாம் மனம் வைத்தால், ஒரு தன்னம்பிக்கை பயிற்சியாளர் சொன்ன இந்த முறையை கடைப்பிடித்து பாருங்கள்.
ஒரு சிறிய டைரி வைத்து அதில் தினம் நடக்கிற நிகழ்வுகளை பட்டியலிட்டு எழுதுங்கள். தினம் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளையும் தவறாமல் செய்யவேண்டிய வேலைகளையும் தனித்தனியாக எழுதி வையுங்கள். நீங்கள் செய்து முடித்த பின் அந்த டைரியை எடுத்து செய்து முடித்ததற்கான அடையாளத்தை இட்டுக் கொள்ளுங்கள். மேலும் உங்களை பாதிக்கும் விஷயங்கள் என அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி வையுங்கள்.
மகிழ்ச்சி என்றாலும் கஷ்டம் என்றாலும் அனைத்தையும் எழுதி வாருங்கள். முதலில் எழுத சோம்பலாகவே இருக்கும். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலுடன் விடாமல் 21 நாட்கள் எழுதிப் பாருங்கள். உடன் மனதை ஒருமுகப்படுத்தும் யோகா தியானம் உடற்பயிற்சி விளையாட்டு போன்றவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுக்கே!