நீங்கள் கடைசியாக வாய் விட்டு சிரித்தது எப்போது?. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதே சிரிப்புதான். அதற்காக குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெல்லியதாக ஒரு புன்னகையை தவழ விட்டாலே போதும். மனம் மகிழ்ச்சியாக இருக்க எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்க வேண்டும். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும்போது, யோகா செய்யும்போது இது சுரக்கும்.
இப்படி ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் பாசாங்கு செய்தால் போதும். உங்கள் மனம் அதை நிஜம் என நம்பி நீங்கள் மகிழ்ச்சிக்கும் தயார் என மூளைக்குத் தகவல் தரும். உடனே எண்டோர்ஃபின் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.
கன்னத்தில் கை வைக்காதே என்று பெரியவர்கள் கூறுவார்கள். கன்னத்தில் கை வைத்தபடி சிரிக்க முயன்று பாருங்கள். டன் டன்னாக நன்றாக சோகம்தான் வரும். அதுவே நீங்கள் விழிப்புணர்வோடு, உங்கள் உடல் அசைவுகளை உங்கள் மூளை கவனித்து நீங்கள் விரும்பும் மனநிலை எதுவோ அதற்கு உரிய சுரப்பியை சுரக்கச் செய்கிறது என்பதை புரிந்து கொண்டு கன்னத்திலிருந்து கையை எடுத்து விட்டு அழகாகப் புன்னகை செய்தால் உங்கள் சோகம் காணாமல் போகும்.
ஒரு கல்லுரியில் மாணவர்கள் ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தனர். மாணவர் வரிசையில் எண்பது வயது பெண்மணி பேச எழுந்தார்.
எல்லோரும் அவளை ஆச்சர்யமாகப் பார்க்க அவர், "நான் வயதில் முதிர்ந்தவள்தான். ஆனால் என் மனது உங்களுடன் படிக்க விளையாடத் துடிக்கும் ஸ்வீட் எய்ட்டீன் தான்" என்றதும் பலத்த கைத்தட்டல் கேட்டது. புன்னகையுடன் அந்த பாராட்டை ஏற்றுக் கொண்ட இந்த பெண்மணி, "படிப்பையோ, விளையாட்டையோ, சந்தோஷமான தருணங்களை அனுபவிப்பதையோ நிறுத்துவதற்கான காரணமாக முதுமை அடைந்து விட்டோம் என்று சொல்லிக் கொள்வது பெருமையாக இருக்கலாம். உண்மையில் அவற்றை நிறுத்துவதால்தான் முதுமை நம்மை வந்து அடைகிறது. உங்கள் அன்றாட மனநிலையை மகிழ்ச்சியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் மனதுக்குப் பிடித்த பொழுது போக்குகளில் ஈடுபடுவதால் முதுமை உடலை வேண்டுமானால் நெருங்கும். மனதை ஒரு போதும் நெருங்காது" என்று கூறினார்.
நல்ல மனநிலையோடு உற்சாகமாக இருந்தால் எந்த வயதிலும் இளமை ததும்பும் மகிழ்ச்சி மலரும்.