ஒவ்வொரு தனிமனிதன் உள்ளத்திலும் தான் மதிக்கப்பட வேண்டும் என விருப்பம் பதிந்துள்ளது. நம்முடைய புன்னகை மற்றவர்கள் முக்கியமானவர்கள் என்பதையும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள், ஏற்றுக்கொள்ளப் படுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. புன்னகை மிக எளிமையான உறவை வளர்க்கும் கலை. இது எப்போதும் நேர்மறையாகவே செயல்படுகிறது. சங்கிலித் தொடர்போல் மற்றவர்களையும் குதூகலப்படுத்துகிறது. குழு ஒற்றுமையை வளர்க்கிறது.
நாம் புன்னகைக்கும்போது மூளையில் எண்டோர்பின் சுரக்கிறது. அது மகிழ்ச்சிக்கான மருந்து. இது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. நாம் மகிழ்ச்சியை உணரும்போது, மற்றவர்களும் அம்மகிழ்ச்சியில் பங்கு கொள்ள காரணமாகிறது. திறம் பெற்ற வல்லுனர்கள், சீரிய தலைவர்கள், பெரும் பெயர் எடுத்த சான்றோர்கள் என இவர்கள் அனைவரும் தேவை ஏற்படும்போது புன்னகைக்கத் தவறுவதில்லை. புன்னகை அவர்களின் சுய மரியாதையை கூட்டுவதுடன் இக்கட்டான சூழ்நிலையின்போது கூட,நிலைமை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்பதை மற்றவர்களுக்கும் பறைசாற்றும்.
சிக்கலான சூழ்நிலைகளில் புன்னகைத்தால் பிரச்னைகன் தாக்கத்தைக் குறைக்கும். இறுக்கமான முகம் பதட்டத்தை வெளிப்படுத்தும். வெற்றியின் மீதும், தம் திறமையின் மீதும் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்களால் பதட்டப்படுவதில்லை. மனதிடத்துடன் சவால்களை எதிர்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் முகத்தில் பதட்டம் தெரிவதில்லை. முகமலர்ச்சியுடன் சவால்களை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
புன்னகைத்தல் நம் மனநிலையை உற்சாகப்படுத்தும். அவ்வுற்சாகம் உடல் முழுவதும் பரவிச் சோர்வைக் குறைக்கும். நம் புன்னகை மற்றவர்களைத் தொற்றிக் கொள்வதால் இறுக்கமான சூழ்நிலை அங்கே மறையும். போலிப் புன்னகை போலியான பதில் செயலையே வரவழைக்கும் தன்னம்பிக்கை உள்ள போதே உண்மையான புன்னகையின் பயன் விளங்கும். புன்னகையால் இன்னொரு நன்மையும் உண்டு. அது நம்மை வயது குறைந்தவராகக் காட்டும். புன்னகை மோதலைத் தவிர்ப்பதுடன் நட்பு வட்டாரத்தையும் விரிவாக்கும். கரடு முரடான மனங்களைக் கூட பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது. மக்கள் நம்மை அணுகி நம்முடன் பழக புன்னகை காரணமாகிறது. எனவே தேவையானபோது மகிழ்ச்சியை பகிரவும், புன்னகை புரியவும் மறந்து விடக்கூடாது.