Lifestyle article Image credit - pixabay
Motivation

புலம்பலை புறக்கணியுங்கள் வெற்றி கிடைக்கும்!

பொ.பாலாஜிகணேஷ்

ம்மில் பலர் இருக்கிறார்கள் எதற்கெடுத்தாலும் புலம்புவது யாரைப் பார்த்தாலும் புலம்புவது, எங்கேயும் புலம்புவது எதைப் பற்றியும் புலம்புவது, இவைகள் அன்றாட நிகழ்வுகள். புலம்பல், தப்பித்தல் மனோபாவத்தின் வெளிப்பாடு. மிக எளிமையும் கூட. ஆனால், நாம் மாறாமல் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை நிச்சயம் மாற்ற முடியாது. அதனால், மாற்றம் முதலில் நம்மிடம் வரவேண்டும். 

இது ஓர் கூட்டுச் சமூகம். நமக்கானதை நாம்தான் தேட வேண்டும். நாம் பார்த்து அல்லது படித்து வியக்கின்ற எல்லோரும் கடினப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார்கள். அவர்கள் சந்திக்காத வேதனைகள் இல்லை. அவமானங்கள் இல்லை. இதற்கு மாற்று கிடையாது. வெறும் புலம்பலை வைத்துக் கொண்டு காலத்தை தள்ள முடியும். மாறாக, வெல்ல முடியாது.

வறுமையை, பிறப்பால் வந்த நிறத்தை,நோயை, சாதியை, செய்யும் தொழிலை, பெற்றோரை நினைத்துப் புலம்புவதால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. இருப்பதை ஏற்றுக் கொள்வதும், விரும்புவதைப் போராடிப் பெறுவதற்குத்தான் வாழ்க்கை. இல்லை யென்றால் சுவாரசியமாக இருக்காது.

புலம்பலிலேயே பலர் சந்தோஷப்பட்டுக் கொள்கின்றார்கள். வெறும் அனுதாபத்தை வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் காலத்தை ஓட்ட முடியும். தன்னைப் பாவப்பட்ட மனிதனாக இச்சமூகம் பார்ப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எனக்குப் புரியவில்லை. இது நல்லதும் அல்ல.

ஒரு சிலரால் அடுத்தவர்களின் வெற்றியை ஏற்க முடியாது. எதற்கெடுத்தாலும், அடுத்தவர்களோடு ஒப்பிட்டுக் கொள்வார்கள். பொறாமையால் புலம்புவார்கள். இயலாமையிலும் புலம்புவார்கள். அடிக்கடி விரக்தியின் உச்சத்திற்குச் செல்வார்கள். இவர்களுக்குப் புலம்பலில் மட்டுமே ஆறுதல் கிடைக்கும். இவர்களெல்லாம் சக மனிதர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள். இவர்களின் புலம்பலில் நியாயம் இருப்பதாக தாங்களாகவே நினைத்துக் கொள்வார்கள். ஆனால், அதில் துளியும் உண்மை இருக்காது.

புலம்பலை நிறுத்திவிட்டு, சிறு காரியங்களை நிகழ்த்துவதில் அக்கறைச் செலுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி சிறு சிறு காரியங்களில் ஈடுபடுவது மட்டுமே. வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் விறுவிறுப்பினைக் கொடுப்பதாக வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். 'அடுத்தது என்ன?' என்ற எதிர்பார்ப்போடு இயங்குகின்ற எவரிடமும் புலம்பல் இருக்காது. ஏனென்றால் வெற்றியாளர்களுக்குப் புலம்ப நேரமிருக்காது. புலம்பலை புறக்கணித்து வெற்றியை கொண்டாடுவோம்.

சிறப்பு சிறுகதை: ரமணி தாத்தாவும், நவராத்திரியும்!

உங்கள் சமயலறையில் அடிக்கடி மாற்றப்பட வேண்டிய 6 அத்தியாவசிய பொருள்கள்...

அனைவரையும் ஊக்குவிக்கும் உலகின் சிறந்த கதைகள்!

நவராத்திரி ஏன் பெண்களுக்கு உகந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?

வெற்றிக்கு வித்திடும் நவராத்திரி!

SCROLL FOR NEXT