எல்லோரையும் தோற்கடித்து வெற்றிபெற்று விட்டேன் என்கிற அலட்சியத்தின் அந்த நொடியில்தான், தோல்வி துவங்குகிறது.
இணையத்தில் காணொளி ஒன்று அனைவரையும் கவர்ந்து வருகிறது. தடகளப் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவர் துவக்கத்தில் இருந்தே வேகமாக ஓடி அனைவரையும் உற்சாகத்தில் கை தட்ட வைக்கிறார். இதோ வெற்றிக்கோடு நெருங்கிவிட்டது. அவரின் ஆதரவாளர்கள் தயாரானார்கள் தங்கள் அபிமானத்துக்குரிய வீரரின் வெற்றிக்கு மரியாதை தர,,, இன்னும் இரண்டே அடிகள்தான்..திடீரென ஆர்ப்பரித்த கூட்டம் வியப்பில் வாய் மூடியது. ஆம். அந்த பிரபல வீரர் கடைசியில் நொடிப்பொழுது தானே வெற்றியாளர் என்ற அலட்சியத்துடன் திரும்பிப் பார்க்க பின்னால் வந்த வீரர் ஒரே பாய்ச்சலில் வெற்றிக் கோட்டை தாண்டி விட்டார்.
மகாபாரதத்தின் ஒரு கிளை கதைதான் இது. கனகுருகுலத்தில் பயின்றவர்களுக்கு அது தேர்வு நேரம். அம்பெய்துவதில் சிறந்தவர் யார் என்று குருவானவர் சோதிக்க ஒரு உபாயம் செய்தார். நெடுநா தொலைவில் இருந்த ஒரு பறவையை குறிவைத்து அதன் கண்களில் யார் அம்பு விடுகிறார்களோ அவரே எனது சிறந்த மாணவர் என்று அறிவித்தார். அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் சிறந்தவர்கள் மட்டுமல்ல அம்பு எய்துவதில் வல்லுனர்கள் என்பதால் மிகச்சிறந்த வீரனான கர்ணன் உள்பட "எனக்கு மரம் தெரிகிறது, கிளை தெரிகிறது, அதில் பறவை தெரிகிறது, பறவையின் கால் தெரிகிறது" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஆனால் அர்ஜுனன் மட்டும் "எனக்கு என் அம்பின் நுனியும் அந்தப் பறவையின் கண்ணும்தான் தெரிகிறது" என்றார்.
அர்ஜுனனின் அம்பு சரியாக புறாவின் கண்களை பதம் பார்த்தது. இதில் திறமை ஒரு பக்கம் என்றாலும் மற்றவர்களிடம் ஒரு அலட்சியம் இருந்தது. அதாவது தான் சிறந்தவன்தான் தோற்றுப் போக மாட்டோம் என்ற அலட்சியமே அவர்களை தோல்வியுறச் செய்தது. ஆனால் அர்ஜுனனோ சிறு அலட்சியம் கூட இல்லாமல் தனது இலக்கு எது என்பதை அறிந்து அதை மட்டுமே கருத்தில் கொண்டான்.
வெற்றிக்கு ஒவ்வொருவருக்கும் இலக்கு என்பது நிச்சயம் இருக்க வேண்டும். எப்போதும் இலக்கில் நாம் தெளிவாக இருக்கிறோமோ, எப்போது இலக்கை நோக்கி நாம் ஒருமுகப்பட்டு செல்கிறோமோ, எப்போது இலக்கை அடைந்தே தீரவேண்டும் என்று உறுதியாக இருக்கிறோமோ அப்போது அந்த இலக்கை அடைவதற்கான பாதை நமக்கு எளிதாக புளப்படும்.
நமக்கு நம்முடைய இலக்கிற்கான நோக்கம் மீதான சரியான பார்வை நமக்கு அந்த இலக்கு நமக்கு கை கூடுவதற்கான வாய்ப்புகளும் மிக மிக அதிகம். இதுதான் என்னுடைய இலக்கு. இதற்காக நான் பெரும் முயற்சி எடுக்கிறேன். இதில் சிறு அலட்சியம் கூட எனக்கு தோல்வியில் முடியும். இந்த இலக்கில் வெற்றி பெறும்வரை வேறு எதிலும் நான் கவனம் செலுத்த மாட்டேன் என்ற மன உறுதிதான் நம்முடைய இலக்கை வெற்றி பெற வைக்கும் சரியான நோக்கமாக இருக்கும்.
இலட்சியத்துக்கு தடையாகும் அலட்சியத்துக்கு அடிப்படை காரணமே நான் வெற்றி பெற்று விட்டேன்.. இனி யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற இறுமாப்பு. இதை அகற்றி விட்டு விழிப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.