நமக்கு தெரியாத எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் விமர்சனம் செய்வது, அடுத்தவர்களிடம் அதைப்பற்றி தவறாக பேசுவது சரியான செயல்தானா? அப்படி செய்வதால் ஏற்படும் பாவம் யாருக்கு வந்து சேரும் தெரியுமா? இதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு தன் கையாலே உணவு சமைத்து அதை தன் அமைச்சர்களுக்கு பரிமாற வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவரும் ஒருநாள் தன் கையாலேயே சாப்பாட்டை சமைத்து அதை எடுத்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்பொழுது வானத்தில் கழுகு ஒன்று அதன் கால்களில் பாம்பை எடுத்துக்கொண்டு பறந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
அப்போது அந்த பாம்பின் விஷத்தின் ஒரு துளி அந்த உணவில் வந்து விழுந்து விடுகிறது. இது எதுவும் தெரியாத ராஜா அந்த உணவை அமைச்சர்களுக்கு பரிமாற அதை சாப்பிட்ட அனைவருமே இறந்து விடுகிறார்கள்.
இதை கவனித்துக் கொண்டிருந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம், 'இந்த பாவக்கணக்கை யார் மீது எழுதுவது என்று கேட்கிறார். மன்னன் மீது ஏழுத வேண்டுமா? கழுகின் மீது எழுத வேண்டுமா? பாம்பின் மீதா இல்லை அமைச்சர்கள் மீதா?' என்று கேட்கிறார். அதற்கு எமதர்மன் சித்திரகுப்தனிடம் பொருத்திருக்க சொல்கிறார்.
ராஜா தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக எண்ணி ஊரில் ஒரு அன்னச்சத்திரம் ஆரமித்து இலவசமாக எல்லோருக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது அந்த ஊருக்கு வந்த சாதுக்கள் சிலர் அங்கே இருந்த பாட்டியிடம், 'ராஜாவுடைய அன்னச்சத்திரம் எங்கே இருக்கிறது?' என்று வழிக் கேட்கிறார்கள். அதற்கு வழியை சொன்ன பாட்டி அத்துடன் நிறுத்தாமல், 'அந்த சாப்பாட்டை சாப்பிட்டால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை' என்று சொல்கிறார். இப்போது எமதர்மராஜா சித்திரகுப்தனிடம், 'அந்த பாவக்கணக்கை இந்த கிழவியின் மீது எழுது' என்று கூறுகிறார்.
இந்தக் கதையில் வந்ததுப் போலதான் நமக்கு தெரியாத விஷயத்தையோ அல்லது சம்மந்தமில்லாத விஷயத்தையோ பற்றி தவறாக பேசினால், பாவம் நமக்கு தான் வந்து சேரும். இதை புரிந்து நடந்துக்கொண்டால் போதும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.