உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடினமான நிலையில் இருக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?
அப்படியானால் உங்களுக்குத் தேவையானது Stoicism தான்.
கவலைப்படாதீர்கள் வாழ்க்கையில் முன்னேற நீங்கள் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட வேண்டும், காலையில் 4:00 மணிக்கு எந்திரிக்க வேண்டும் என நான் சொல்லமாட்டேன். ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவது அவசியமான ஒன்றாகும். Stoicism என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமது வாழ்க்கைக்கு எது தேவை என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வதாகவும். இது நம் வாழ்வில் எதிர்மறையான எண்ணங்களைக் குறைத்து, ஒரு தனி நபரை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட வாழ்க்கைத் தத்துவமாகும்.
இதைப் பின்பற்றப்படுவதற்கு முதலில் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் எண்ணங்களை உருவாக்கும் நீங்களே அதை அழிப்பவராகவும் இருக்கிறீர்கள். உங்களைப் பற்றிய விஷயங்களையும், பிறர் உங்களைப் பற்றி கூறும் கருத்துக்களையும் நீங்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பிறர் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற சிந்தனை உங்களை அதிகம் ஆக்கிரமிக்கிறது. எனவே நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால் பிறர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை குறைத்துக்கொண்டு எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
இது தேவையா?
மக்கள் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய இரண்டு வகையான விஷயங்கள் உள்ளன. ஒன்று அவர்களுக்குத் தேவையான பொருட்கள், மற்றொன்று அவர்கள் விரும்பும் விஷயங்கள். ஒருவருக்கு தேவையான அடிப்படை உடைகள், உணவுக்கான குளிர்சாதனப்பெட்டி, தங்குவதற்கு வீடு, உறங்குவதற்கு படுக்கை போன்றவை நம் வாழ்க்கையை எளிதாக்க உதவும் தேவையான ஒன்றாகும். இதுவே விலை உயர்ந்த மடிக்கணினி, செல்போன், டிசைனர் ஆடை, ஸ்போர்ட்ஸ் பைக் போன்றவை நம் விரும்பும் ஒன்றாகும். எப்பொழுதுமே நீங்கள் விரும்பும் ஒன்றைவிட அது உங்களுக்கு உண்மையில் தேவையானதா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.
உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்: எப்பொழுதுமே உங்களுடைய மகிழ்ச்சியை பிற பொருட்களிடமோ அல்லது பிறரிடமுமோ வைத்திருக்க வேண்டாம். உங்கள் மகிழ்ச்சிக்கான முழு பொறுப்பும் நீங்களாகவே இருக்க முயலுங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அதற்கான முடிவுகளை எடுங்கள். நீங்கள் நினைத்துவாறு உங்கள் வாழ்க்கை செல்லவில்லை என்றாலும், அதற்கான சரியான திட்டமிடலும், செயலும் உங்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும். ஒருபோதும் உங்கள் மகிழ்ச்சியை பொருட்களை சார்ந்து வைத்திருக்காதீர்கள்.
இத்துடன் உங்கள் வெற்றி தோல்விகளை சகஜமாகப் பாருங்கள். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல. நாம் செய்யும் செயல்களுக்கான முடிவுகளே வெற்றியாகவும் தோல்வியாகவும் மாறுகிறது. அனைத்தையும் சமமாகப் பார்த்தால், மேலும் சிறப்பான இடத்தை நோக்கிய வெளிச்சம் உங்கள் பார்வையில் படும்.
இந்த Stoicism கொள்கையைப் பின்பற்றி உங்களுக்குள் எப்படி அமைதியாக இருப்பது என்பதைக் கற்றுக் கொண்டால், உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.